Saturday, March 21, 2009

பார்த்ததும் காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் - சிறு ஒப்பிடு

பார்த்ததும் காதல் தோன்றி காதல் செய்பவர்களை பார்த்தால் முன்பெல்லாம் ஏற்று கொள்ள மனம் மறுத்ததுண்டு. அது எப்படி பார்த்ததும் காதல் தோன்றும் ? அவ்வாறு தோன்றினாலும் அது எவ்வாறு நிலைக்கும் ? ஒருவருடைய குணாதிசயங்கள் தெரியாமல் ஒருவரை காதல் செய்வது என்பது சரியானதா ? என்றெல்லாம் சிந்தித்தது உண்டு.

ஆனால் அதுவே இங்கு நடக்கும் திருமண முறைகளை பார்க்கும் பொழுது " பார்த்ததும் காதல் என்பதற்கும் ,இங்கு நடக்கும் திருமண முறைகளுக்கும் " பெரிதாக வித்தியாசம் இருப்பதாக தெரிய வில்லை.

இங்கு திருமணம் எவ்வாறு நடைபெறுகிறது?

ஆண் வீட்டிலிருந்து பெண் வீட்டுக்கு ஒரு புகைபடம் , அது போல் பெண் வீட்டிலிருந்து ஒரு புகைப்படம் ஆண் வீட்டிற்கு . ஆண் , பெண் படத்தை பார்கிறான். அழகாக இருக்கிறாளா , அவன் நினைத்தவாறு இருக்கிறாளா என்று பார்த்து விட்டு அவ்வாறு இருந்தால் சரி என்று சொல்கிறான். அது போல பெண் , அவன் படத்தை பார்த்து ஸ்மார்டாக இருக்கிறானா என்று பார்த்து விட்டு சரி என்று சொல்கிறாள் . இருவீட்டிலும் சரி என்றால் அடுத்த கட்ட பேச்சுக்கு தயாராகி இறுதியாக திருமணத்தில் சென்று முடிகிறது.

கூட்டி கழித்து பார்த்தால் இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக தெரிவதில்லை. பெண் பார்க்க செல்லும் பொது , எவ்வளவு பெரிய வாயாடியாக இருந்தாலும் அல்லது அடங்கா பிடாரியாக இருந்தாலும் , சாதுவாக , அமைதியாக நின்று விட்டுத்தான் செல்லும். அதை வைத்து எவ்வாறு பெண்ணின் குணாதிசயங்களை நிர்ணயிக்க முடியும்?

அதுபோல் எவ்வளவு பெரிய தண்ணி லாரியாக இருந்தாலும் , அவன் அந்த இடத்தில் சாந்த சொருபியாக இருந்து விட்டுத்தான் செல்வான். இதை வைத்து எவ்வாறு ஆணின் குணாதிசயங்களை நிர்ணயிக்க முடியும்? ஆனால் இவ்வாறுதான் திருமணம் நடந்து கொண்டு இருக்கிறது இந்த நாட்டில்.

இவ்வாறு விவாதித்தோம் என்றால் சில பேர் இவ்வாறு சொல்வதுண்டு. குடும்பத்தின் பின்னணியை வைத்துதான் நாங்கள் பெண்/ ஆண் தீர்வு செய்கிறோம். அந்த குடும்பத்தில் பிறந்த பெண்/ ஆண் தவறானவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று.

இது சாத்தியம்தானா? நல்ல பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள் அனைவரும் நல்லவர்களாகத்தான் வளர்கிரார்களா? அல்லது தாய் , தந்தை கெட்ட வழியில் சென்றாலும் அவர்களிடம் வளரும் குழந்தைகள் அனைவரும் கெட்டவர்களாக தான் வளர்கிரார்களா? ஆக தாய் தந்தையரை வைத்து பிள்ளைகளை தரம் பிரிப்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஆக ஒருவரை பற்றி ஒருவருக்கு சரியாக தெரியாமல் , மாத வருமானம் மற்றும் குடும்ப பின்னணியை வைத்து நடக்கும் திருமணம் சரிதானா?

என்னை பொறுத்த வரையில் இங்கு நடக்கும் திருமண முறைகள் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு திருமணம் நடந்து பின்பு ஒருவருக்கு ஒருவர் பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து வரை போகும் மக்களை எண்ணி விட முடியும். இன்னும் சில குடும்பங்களில் விவாகரத்து என்று பேசினாலே குடும்ப மானம் போய்விடும் என்று சொல்லி , அந்த வாழ்கையை விட்டு வெளியேறவும் முடியாமல் , வாழவும் பிடிக்காமல் வாழ்ந்து செத்து கொண்டிருக்கும் பெண்கள் எத்தனையோ பேர். இதற்குள் குழந்தை பிறந்து விட்டால் , அவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருபவர்கள் நிறைய பேர்.

ஆக இங்கு நடக்கும் திருமண முறைகள் சரிதானா என்பதில் எனக்கு எப்பொழுதும் ஒரு குழப்பம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த முறை சரிதான் என்றால் , பார்த்ததும் காதல் என்பதை நாம் என் ஏற்று கொள்ள மறுக்கிறோம்?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்.

Sunday, March 15, 2009

படித்ததில் பிடித்தது - ஓர் கொலை வெறி ஸ்டோரி

தன் மகளின் அறையை கடந்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய, சட்டென நின்றார் அருள். உற்று நோக்கிய போது, எப்போதும் இல்லாமல் அறை மிக சுத்தமாக இருந்தது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடங்களில் இருந்தன. ஏதோ நெருட அறைக்குள் சென்ற அருளின் கண்களில் தலையணை மீது இருந்த கடிதம் தென்பட்டது.
'அன்புள்ள அப்பாவுக்கு' என்று அதில் எழுதியிருந்தது. சற்றும் தாமதிக்காமல் கடிதத்தை பிரித்து படிக்கலானார்
அன்புள்ள அப்பா,
இதை மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன். உங்களை பிரிவதில் எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது, ஆனால் வேறு வழியில்லை. நான் வீட்டை விட்டு போகிறேன். உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை. ஆமாம்பா, நான் என் காதலன் வெற்றிசெல்வனுடன் இந்த ஊரை விட்டு போகிறேன்.
வெற்றியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரும் என்னை மிகவும் காதலிக்கிறார். சந்திக்கும் போது உங்அளுக்கும் அவரைப் பிடிக்கும். கைலி கட்டிக்கொண்டு, அழுக்குச்சட்டையுடனும் முரட்டு தாடியுடனும் அவர் காட்சியளித்தாலும் மிகவும் பாசமானவர். அது மட்டும் இப்போ காரணமில்லை அப்பா, நான் இப்போது கருவுற்று இருக்கிறேன். வெற்றிக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும்,
நான்கு குழந்தைகளும் இருந்தாலும், இந்த குழந்தையையும் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள
வேண்டும் என்று சொல்கிறார். ஐம்பது வயதில் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதில் பெருமிதம் அவருக்கு.
வெற்றி ஒரு காட்டில் தான் வாழ்கிறார். அதிகம் பணம் இல்லையென்றாலும் கஞ்சா வளர்த்து நிறைய செல்வம் சேர்க்கலாம் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், சீக்கிரமே எய்ட்ஸீக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டால் அதை வெற்றிக்காக வாங்கவும் அந்த பணத்தை நாங்கள் பயன்படுத்திகொள்வோம்.
எனக்கு 16 வயதாகிறது அப்பா. என்னால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. கவலைக்கொள்ள வேண்டாம். சீக்கிரமே உங்கள் பேரக்குழந்தைகளுடன் உங்களை காண வருவேன்.
உங்கள் அன்பு மகள்,
இளவேனில்

படப்படப்புடன் படித்துக்கொண்டிருந்த கடிதத்தில் 'திருப்புக' என்று எழுதியிருந்ததையும் கவனித்தார் அருள். புரட்டிப்பார்த்த போது அதில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது

அப்பா,
நீங்கள் படித்தவற்றில் எதுவும் உண்மையில்லை. நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ மோசமான விசயங்கள் நடக்கலாம் என்று உங்களுக்கு நினைவுகூறவே அந்தக்கடிதத்தை எழுதினேன். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மேசை மீதிருக்கும் என் தேர்வு அறிக்கை எவ்வளவோ மேல் என்று தோன்றலாம். அதை பார்த்துவிட்டு, கையொப்பம் இடலாம் என்று தோன்றினால் என்னை அழைக்கவும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா..

Saturday, March 7, 2009

இப்ப சந்தோசமா உங்களுக்கு - ஐ.டி துறையின் வீழ்ச்சி

தமிழ் MA , அறை எண் 305 கடவுள் போன்ற படம் எடுத்தவர்களுக்கு மற்றும் அந்த படங்களை ரசித்தவர்களுக்கும் சந்தோஷமான காலம் என்றே நினைக்கின்றேன். காரணம் ஐ.டி துறையின் வீழ்ச்சி.

பொதுவாக ஐ.டி துறையில் வேலை பார்க்கும் மக்களை பார்த்தாலே ,மற்றவர்கள் பொறாமையுடனும் , தப்பான கண்ணோட்டத்துடனும் பார்கிறார்கள். அவர்கள் செய்த தவறுதான் என்ன?

பொதுவான காரணம் அவர்கள் மற்றவர்களை ஒப்பிடும் பொழுது அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அதிகம் செலவு செய்கிறார்கள் என்று. மேலே குறிப்பிட்ட படத்தை எடுத்தவர்கள் கூட அதே கருத்தை வலியுறுத்தி இருப்பார்கள். இவ்வாறு எடுத்த படத்தின் இயக்குனரிடம் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றே ஒன்றுதான்.

*) இவர்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு, இரண்டாவது படத்திற்கு வாங்கும் சம்பளம் ஆயிர கணக்கிலா அல்லது கோடி கணக்கிலா?

*) இந்த படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் ஆயிர கணக்கிலா அல்லது கோடி கணக்கிலா?
இவர்கள் இவ்வாறு வாங்கி கொண்டு ஐ.டி துறையை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது? அதுவும் உச்ச கட்டமாக ஐ.டி துறையில் வேலை பார்ப்போறின் கை முடமாகி போவது போல படத்தில் காட்டுவதை என்னவென்று சொல்வதென்றே தெரிய வில்லை.

தவ்று அனைவரிடமும்தான் இருக்கிறது. ஒருவரை மற்றும் குறை கூறுவதில் எந்த புண்ணியமும் இல்லை. ஐ.டி ஊழியன் ஒருவன் ஆட்டோ பிடிக்க சென்றால் , அவனை பார்த்த மாத்திரத்தில் சாதாரண தொகையை விட இரண்டு மடங்காக கேட்பது ஆட்டோ காரரின் குற்றமா அல்லது ஐ.டி ஊழியனின் குற்றமா?
ஐ.டி ஊழியன் வீடு வாடகை எடுக்க சென்றால் , வாடகை தொகையை இரண்டு மூன்று மடங்காக கேட்பது யாரின் குற்றம்?

ஆனால் இப்போது ஐ.டி துறையில் சம்பள குறைப்பு நடந்து கொண்டு இருக்கிறது. வேலை இழப்பு என்பது சாதாரண விசயமாகி விட்டது. இப்பொழுது இவர்கள் ஏற்றிய வாடகை தொகையை குறைத்து விடுவார்களா ? இதை தட்டி கேட்பது யார்?

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் மேல் தட்டு மக்கள் அல்ல..சாதாரன குடும்பத்தில் பிறந்து , படித்து இன்று நல்ல நிலையை பிடிக்க போராடி கொண்டு இருப்பவர்கள் தான். பொதுவாக கீழ் தட்டு மக்கள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம்.. பொருளாதார சூழ்நிலை மாற வேண்டும் என்று ஊர் முழுவதும் மார்தட்டி கொள்கிறோம்.... ஆனால் அந்த நிலையை ஒருவன் எட்டினால் ஏற்று கொள்ள மறுக்கிறோம்...என்ன காரணம்?

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்பது இதுதானோ?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்