
சென்ற வாரம், தற்செயலாக ஒரு நல்ல பாம்பு திருச்சியில் உள்ள எங்கள் வீட்டின் குளியலறையில் புகுந்து விட்டது (வெயில் காலத்தில் அதிக வெப்பதிற்காக குளிக்க வந்ததோ என்னமோ தெரிய வில்லை). இது எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. இதை பார்த்த எங்கள் வீட்டின் பின்புறம் உள்ளவர்கள் என் அம்மாவிடம் சொல்ல , அவர் பதறி போய் வீட்டில் கதவை எல்லாம் அடைத்து விட்டு எங்களுடைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.
அவர்கள் குளியலறையில் எல்லா இடத்தையும் அலசியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. பின்பு அடைத்த கதவை திறந்து வீட்டில் உள்ளே தேடும் போது பாம்பு கண்ணில் தென்பட்டிருக்கிறது(அந்த இடத்தில நின்றுதான் எங்கள் அம்மா கதவை எல்லாம் அடைத்து இருக்கிறார். நல்ல வேலை பாம்பு ஒன்றும் செய்யவில்லை. உண்மையிலேய அது நல்ல பாம்புதான் போல).
பின்பு நண்பர் ஒருவர் அதை விரட்டுவதற்காக, ஒரு குச்சியை எடுத்து விரட்டும் போது பாம்பு படம் எடுத்து மிரட்டி இருக்கிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது போல் அனைவரும் விலக, பின்பு அவர் சின்ன குச்சி சரி படாது என்று நினைத்து பெரிய இரும்பு எதுவும் கிடைக்குமா என்று வெளியில் சென்று விட்டார்.இதற்கிடையில் இதை கேள்வி பட்டு கூட்டமும் கூடி விட்டது. பின்பு அங்கு இருந்த ஒரு முஸ்லிம் பெண் ஒருவரும் அவருடைய மகனும் சேர்ந்து பாம்பை அடித்து கொன்று விட்டார்கள். ஒரு வழியாக பாம்பின் சகாப்தம் முடிந்தது.
பின்பு நடந்ததுதான் காமெடியே.
அங்கு கூடி இருந்த சில இந்து மத பெண்கள், நல்ல பாம்பை ஏன் அடித்தீர்கள் ? அதை அடிக்க கூடாது , விரட்டதான் வேண்டும். நல்ல பாம்பை அடித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் கூறி எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி , அதோடு மட்டும் அல்லாமல் அதை வீட்டில்தான் புதைக்க வேண்டும். பின்பு பால் ஊற்ற வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். நல்ல வேலை பாலை ஊத்த வில்லை. புதைத்து மட்டும் இருக்கிறார்கள்(நல்ல வேலை பாலை ஊற்றாமல் என் வயிற்றில் பாலை வார்த்தார்கள். இல்லை என்றால் பாலா போகியிருக்கும் நிலைமை.இல்லை என்றால் நாங்களும் மூடநம்பிகையை பால் ஊற்றி வளர்த்தது போல ஆகி இருக்கும்.)
இங்கு எனக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது இவைதான்.
*) இன்னும் இந்த காலத்தில் இந்த மாதிரியான மூடநம்பிக்கை தேவைதானா?
*) அது எப்படி நல்ல பாம்பை அடித்தால் மட்டும் குடும்பத்திற்கு ஆகாமல் போகும். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ பல பாம்புகளை அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கிறதா ?
*) நடைமுறை வாழ்கையில் நாய் , பன்னிகளை எல்லாம் அடித்து கொண்டுதான் இருக்கிறோம் . நாய் , பன்னி அல்லது வேறு சில விலங்குகளை அடித்தால் குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாதா? அது என்ன நல்ல பாம்புக்கு மட்டும் தனி விசேசம்?(உங்களுக்கு ஏதாவது இதில் விசயம் தெரிந்தால் சொல்லவும்)
*) நல்ல பாம்பின் தோல்கள் அதிக விலைக்கு போகும். இதை வைத்து பெல்ட், ஹண்ட்பாக் போன்றவை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதற்காக பல நல்ல பாம்புகள் வேட்டையாட பட்டுதான் வருகின்றன. இப்படி வேட்டை ஆடுபவர்களின் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கின்றனவா?
இதை விட ஒரு பெரிய கொடுமை, இதை பற்றி நான் என்னுடைய அலுவலக நண்பர்களிடம் விவரித்து கொண்டிருக்கும் பொழுதே , " அட என்னங்க நல்ல பாம்ப போய் அடித்து விட்டிர்களே , என்ன போங்க" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.இதை விட ஒருவர் மேலே போய் , கடந்த 10 வருடங்களாக என் குடும்பம் படாத பாடு பட்டுவிட்டது . அதற்கு காரணம் 10 வருடங்களுக்கு முன்பு நான் அடித்த ஒரு நல்ல பாம்பே காரணம் என்று பெருமிதமாக கூறினார். இது எங்களுடைய நம்பிகை என்றும் கூறி கொண்டார். என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.
அறியாமை ஒழிந்திட , மூட நம்பிக்கைகளை அகற்ற படிப்பு அறிவு தேவை என்று கூறிக்கொண்டு அனைவர்க்கும் கல்வி அவசியம் என்று வாய் கிழிய கூறுகிறோம். ஆனால் அப்படியும் அது அழியாது என்றே நினைக்கிறன். ஏதாவது உதாரணம் கூற வேண்டும் என்றால் " இந்த கணினி காலத்தில் போய் இப்படி எல்லாம் கூறுகிறிர்களே" என்று சொல்லும் வழக்கு நம்மிடம் உண்டு. ஆனால் அந்த கணினி துறையில் உள்ளவர்களே இதை இன்னமும் நம்பி கொண்டு இருக்கும் பொழுது .................ஒன்றும் சொல்வற்கு இல்லை.
நல்ல பாம்பை பற்றி சில விசயங்களை பார்போம்.
*) உலகத்தில் உள்ள அதிக விசத்தை கக்கும் பாம்புகளில் இதுவும் ஒன்று.
*) இது ஒரு கடியில் 6-7 மில்லி விசத்தை கக்கும் தன்மை உடையது. இந்த விஷம் ஒரு யானையவே அழிக்கும்.
*) இது அதிக பட்சம் 12 அடி வளரும். இப்போதைய அதிகபட்ச சாதனை 5.58 meter
*) கோபத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய உடம்பின் மூன்றில் ஒரு பகுதியை நிமிர்த்தி படம் எடுக்கும்.
*) இனபெருக்க சமயத்தில் , பெண் நாகம் , ஆண் நாகத்தின் வாயில் ஒரு முத்தம் கொடுக்க முயற்சி செய்யுமாம். அவ்வாறு அது வெற்றிகரமாக நடந்தால், பெண் நாகம் பல முட்டைகளை இடுமாம். தோல்வியானால் ஒரு முட்டையும் இடாதாம்.
இவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் பாம்பு வீட்டிற்குள் வந்தால் , அதை அடிக்காமல் கொஞ்சவா முடியும் ?.
ஒன்று மட்டும் புரிகிறது ,,, 1000 பெரியார் வந்தாலும் நாட்டை திருத்த முடியாது.
ப.பிரதீப்