Sunday, April 26, 2009

1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.



சென்ற வாரம், தற்செயலாக ஒரு நல்ல பாம்பு திருச்சியில் உள்ள எங்கள் வீட்டின் குளியலறையில் புகுந்து விட்டது (வெயில் காலத்தில் அதிக வெப்பதிற்காக குளிக்க வந்ததோ என்னமோ தெரிய வில்லை). இது எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. இதை பார்த்த எங்கள் வீட்டின் பின்புறம் உள்ளவர்கள் என் அம்மாவிடம் சொல்ல , அவர் பதறி போய் வீட்டில் கதவை எல்லாம் அடைத்து விட்டு எங்களுடைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.



அவர்கள் குளியலறையில் எல்லா இடத்தையும் அலசியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. பின்பு அடைத்த கதவை திறந்து வீட்டில் உள்ளே தேடும் போது பாம்பு கண்ணில் தென்பட்டிருக்கிறது(அந்த இடத்தில நின்றுதான் எங்கள் அம்மா கதவை எல்லாம் அடைத்து இருக்கிறார். நல்ல வேலை பாம்பு ஒன்றும் செய்யவில்லை. உண்மையிலேய அது நல்ல பாம்புதான் போல).



பின்பு நண்பர் ஒருவர் அதை விரட்டுவதற்காக, ஒரு குச்சியை எடுத்து விரட்டும் போது பாம்பு படம் எடுத்து மிரட்டி இருக்கிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது போல் அனைவரும் விலக, பின்பு அவர் சின்ன குச்சி சரி படாது என்று நினைத்து பெரிய இரும்பு எதுவும் கிடைக்குமா என்று வெளியில் சென்று விட்டார்.இதற்கிடையில் இதை கேள்வி பட்டு கூட்டமும் கூடி விட்டது. பின்பு அங்கு இருந்த ஒரு முஸ்லிம் பெண் ஒருவரும் அவருடைய மகனும் சேர்ந்து பாம்பை அடித்து கொன்று விட்டார்கள். ஒரு வழியாக பாம்பின் சகாப்தம் முடிந்தது.



பின்பு நடந்ததுதான் காமெடியே.



அங்கு கூடி இருந்த சில இந்து மத பெண்கள், நல்ல பாம்பை ஏன் அடித்தீர்கள் ? அதை அடிக்க கூடாது , விரட்டதான் வேண்டும். நல்ல பாம்பை அடித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் கூறி எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி , அதோடு மட்டும் அல்லாமல் அதை வீட்டில்தான் புதைக்க வேண்டும். பின்பு பால் ஊற்ற வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். நல்ல வேலை பாலை ஊத்த வில்லை. புதைத்து மட்டும் இருக்கிறார்கள்(நல்ல வேலை பாலை ஊற்றாமல் என் வயிற்றில் பாலை வார்த்தார்கள். இல்லை என்றால் பாலா போகியிருக்கும் நிலைமை.இல்லை என்றால் நாங்களும் மூடநம்பிகையை பால் ஊற்றி வளர்த்தது போல ஆகி இருக்கும்.)



இங்கு எனக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது இவைதான்.
*) இன்னும் இந்த காலத்தில் இந்த மாதிரியான மூடநம்பிக்கை தேவைதானா?
*) அது எப்படி நல்ல பாம்பை அடித்தால் மட்டும் குடும்பத்திற்கு ஆகாமல் போகும். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ பல பாம்புகளை அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கிறதா ?
*) நடைமுறை வாழ்கையில் நாய் , பன்னிகளை எல்லாம் அடித்து கொண்டுதான் இருக்கிறோம் . நாய் , பன்னி அல்லது வேறு சில விலங்குகளை அடித்தால் குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாதா? அது என்ன நல்ல பாம்புக்கு மட்டும் தனி விசேசம்?(உங்களுக்கு ஏதாவது இதில் விசயம் தெரிந்தால் சொல்லவும்)
*) நல்ல பாம்பின் தோல்கள் அதிக விலைக்கு போகும். இதை வைத்து பெல்ட், ஹண்ட்பாக் போன்றவை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதற்காக பல நல்ல பாம்புகள் வேட்டையாட பட்டுதான் வருகின்றன. இப்படி வேட்டை ஆடுபவர்களின் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கின்றனவா?



இதை விட ஒரு பெரிய கொடுமை, இதை பற்றி நான் என்னுடைய அலுவலக நண்பர்களிடம் விவரித்து கொண்டிருக்கும் பொழுதே , " அட என்னங்க நல்ல பாம்ப போய் அடித்து விட்டிர்களே , என்ன போங்க" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.இதை விட ஒருவர் மேலே போய் , கடந்த 10 வருடங்களாக என் குடும்பம் படாத பாடு பட்டுவிட்டது . அதற்கு காரணம் 10 வருடங்களுக்கு முன்பு நான் அடித்த ஒரு நல்ல பாம்பே காரணம் என்று பெருமிதமாக கூறினார். இது எங்களுடைய நம்பிகை என்றும் கூறி கொண்டார். என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.



அறியாமை ஒழிந்திட , மூட நம்பிக்கைகளை அகற்ற படிப்பு அறிவு தேவை என்று கூறிக்கொண்டு அனைவர்க்கும் கல்வி அவசியம் என்று வாய் கிழிய கூறுகிறோம். ஆனால் அப்படியும் அது அழியாது என்றே நினைக்கிறன். ஏதாவது உதாரணம் கூற வேண்டும் என்றால் " இந்த கணினி காலத்தில் போய் இப்படி எல்லாம் கூறுகிறிர்களே" என்று சொல்லும் வழக்கு நம்மிடம் உண்டு. ஆனால் அந்த கணினி துறையில் உள்ளவர்களே இதை இன்னமும் நம்பி கொண்டு இருக்கும் பொழுது .................ஒன்றும் சொல்வற்கு இல்லை.



நல்ல பாம்பை பற்றி சில விசயங்களை பார்போம்.


*) உலகத்தில் உள்ள அதிக விசத்தை கக்கும் பாம்புகளில் இதுவும் ஒன்று.


*) இது ஒரு கடியில் 6-7 மில்லி விசத்தை கக்கும் தன்மை உடையது. இந்த விஷம் ஒரு யானையவே அழிக்கும்.


*) இது அதிக பட்சம் 12 அடி வளரும். இப்போதைய அதிகபட்ச சாதனை 5.58 meter


*) கோபத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய உடம்பின் மூன்றில் ஒரு பகுதியை நிமிர்த்தி படம் எடுக்கும்.


*) இனபெருக்க சமயத்தில் , பெண் நாகம் , ஆண் நாகத்தின் வாயில் ஒரு முத்தம் கொடுக்க முயற்சி செய்யுமாம். அவ்வாறு அது வெற்றிகரமாக நடந்தால், பெண் நாகம் பல முட்டைகளை இடுமாம். தோல்வியானால் ஒரு முட்டையும் இடாதாம்.



இவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் பாம்பு வீட்டிற்குள் வந்தால் , அதை அடிக்காமல் கொஞ்சவா முடியும் ?.



ஒன்று மட்டும் புரிகிறது ,,, 1000 பெரியார் வந்தாலும் நாட்டை திருத்த முடியாது.




ப.பிரதீப்

Tuesday, April 14, 2009

"விரோதி" தமிழ் வருட பிறப்பும், அம்பேத்கர் பிறந்த நாளும்

இன்று அம்பேத்கர் பிறந்த நாள் என்ற பொழுதும் , காலையிலிருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன காரணமோ தெரிய வில்லை யாரும் அம்பேத்கர் பிறந்த நாளை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை.

காலையில் நண்பர் ஒருவரிடம் இருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்தது. நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினேன். அதற்கு அவர் "இல்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கு. நமக்கு இல்லை " என்று கூறினர். திரும்ப பதில் அளிக்க மனம் இல்லாத நிலையில் நிறுத்தி விட்டேன் பதில் அளிப்பதை.

இந்த மாற்றத்தை மக்கள் ஏற்று கொள்ளாததற்கு காரணம் அவர் தலித் என்பதாக கூட இருக்கலாம். இதே இன்று ஒரு வேறு ஒரு ஜாதி தலைவர் பிறந்த நாள் என்றால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கிறன்.எது எப்படியோ, இன்று வாழ்த்துக்குள் கூறி கொண்டாலும் , இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடம் கழித்து கண்டிப்பாக இது அம்பேத்கர் பிறந்த நாளாக மட்டும் கொண்டாட படும் என்பது மாற்ற மடியாது உண்மை. மாறும்.

இதில் பெரிய கொடுமை , அவருடைய இனத்தை சார்ந்தவர்களே இந்த மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பதுதான். " வேறு என்ன சொல்ல 'அறியாமை' ". இந்த அறியாமை இருப்பதால்தான் தலித் இனம் இன்னும் அப்படியே இருந்து கொண்டு இருக்கிறது.

நண்பர் ஒருவரிடம் இதை பற்றி விவாதித்த பொழுது , அவர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். வட மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று மற்ற பண்டிகையை போல் நன்றாக கொண்டாட படுகிறதாம். பிறந்த நாளுக்கு முந்தைய நாள் அன்றே அவர்கள் அம்பேத்கர் சிலை எங்கு இருக்கிறதோ அங்கு சென்று மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கலாம். இன்று அவர்கள் உடுத்தும் உடை வெள்ளை. பின்பு அவர்கள் மேடை கூட்டமிட்டு அவருடைய புகழை எடுத்து உரைபார்கலாம்.

இந்த மாற்றத்தை அங்குள்ள இந்து பழம்பெருமைவாதிகள் ஏற்று கொள்ள முடியாமல் திட்டமிட்டு சில காரியத்தை செய்ததாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன.
அம்பேத்கர் பிறந்தநாள் - ஏப்ரல் 14.
இறந்த நாள் -- டிசெம்பெர் 6.

இந்த நாளை மறக்க அடிக்க வேண்டும் என்பதற்காகவே, பாபர் மசூதியை இடிக்க அவர்கள் எடுத்து கொண்ட நாள் டிசம்பர் 6. இப்படியும் ஒரு கருது நிலவுகிறது.

தமிழ் வருட பிறப்பை, தை ஒன்றுக்கு மாற்றிய பிறகுதான் இன்று அம்பேத்கருக்கு பிறந்த நாள் என்றே பல பேருக்கு தெரிய வருகிறது. இந்த நோக்கில்தான் கருணாநிதி அவர்கள் தமிழ் வருட பிறப்பை மாற்றினார் என்றே தோன்றுகிறது. இந்த நோக்கில்தான் அவர் மாற்றினார் என்றால் இது வரவேற்கத்தக்கது. தமிழ் வருட பிறப்பை தை ஒன்றுக்கு மாற்றினால் இங்கு உள்ளவர்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

இப்படி இருக்க , ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறகும் பொழுது ஒரு பெயரை வைத்து அழைக்கும் பழக்கம் இங்கு உண்டு. அது போல இந்த வருடம் "இந்தபுத்தாண்டுக்கு பெயர் "விரோதி". சரியாகத்தான் அமைந்திருக்கிறது என்று நினைகிறேன் இந்த புத்தாண்டை மாற்றியது பல பேருக்கு விரோதத்தைதான் ஏற்படுத்துகிறது.

"விரோதி" என்பதை போல மொத்தம் 60 பெயர்கள் உண்டாம். 60 வருடம் முடிந்த பிறகு திரும்பவும் இதே பெயர் தொடரும். இதை வைத்துதான் 60வது கல்யாணத்தை நடத்தும் வழக்கம் இங்கு இருக்கிறது.

Sunday, April 5, 2009

தடுமாறும் தாம்பத்யம்

சில நாட்களுக்கு முன்பு , நண்பர் ஒருவரிடம் உரையாடி கொண்டிருந்த பொழுது அவருடைய தங்கையை பற்றி வருத்தத்துடன் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய தங்கைக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும் , பின்பு சில நாட்களிலேயே மனவருத்தம் ஏற்பட்டு இப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டதாகவும், காரணம் சரியாக தெரிய வில்லை என்றும் கூறினார்.

இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே , இன்னொரு நண்பரும் என்னுடைய தங்கைக்கும் இதுமாதிரிதான் , அவரும் இப்பொழுது எங்கள் வீட்டில்தான் உள்ளார் என்று கூறினார்.

பின்பு தீர விசாரித்த பொழுது , இவருக்கும் உள்ள பிரச்சினை பொதுத்தான் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் தாம்பத்யம் நடக்கவில்லை என்பதுதான் அது.

பொதுவாகவே இது மாதிரியான விஷயங்கள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிலருக்கு தாம்பத்யம் நடக்கவில்லை என்றும், இன்னும் சிலருக்கு ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விஷயம் சற்று விஸ்வரூபம் எடுத்து விவாகரத்து வரையிலும் சென்று உள்ளன. மனோதத்துவ நிபுணர்களுக்கு வரும் பெரும்பாலான சந்திப்புகள் இதனுடன் சம்பந்த பட்டே வருகின்றன. பின்பு அவர்கள் கூறும் சிகிச்சைக்கு உட்பட்டு குணமாகி பின்பு குழந்தை பேறு உண்டாகி சந்தோசமாக வாழ்கை சென்றதாக கூறும் சம்பவங்களும் இங்கு உண்டு.
மேலே கூறிய விசயங்களை பார்க்கும் பொழுது , என்னிடம் சில கேள்விகள் எழுகின்றன.

திருமணத்திற்கு முன்பு அனைத்து விசயங்களையும் பார்த்து, விசாரித்து தன் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யும் பெற்றோர்கள் இந்த விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. இன்னும் சற்று தீர சிந்திதோமானால் இது மாதிரியான விசயங்களை தனக்கு வரபோகும் மனபெண்ணிடமோ அல்லது ஆணிடமோ நேரடியாக கேட்க முடியாது என்பதுதான் உண்மை.

இதை தவிர்க்க சில முறைகளை நாம் மேற்கொள்ளலாம்.

*) ஆணோ அல்லது பெண்ணோ , தனக்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் திருமணம் நடக்க போகிறது என்றால் , தானாகவே முன்வந்து "திருமணத்திற்கு நாம் மன மற்றும் உடல் அளவில் தகுதியாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள முறையான மருத்துவரிடம் சென்று முழு உடல் சோதனை எடுத்து கொள்ளலாம்". இதில் ஏதாவது குறை இருக்கிறது என்று தெரிந்து கொண்டால், திருமணத்திற்கு பிறகு எடுக்க போகும் சோதனையை இப்போதே எடுத்து கொண்டதுக்கு சமமாகி விடும். திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சில மனகசப்பை தவிர்கவும் இது ஒரு வாய்பாக அமையும்.

அல்லது

*) ஆண் மற்றும் பெண் இரு வீட்டிலும் , தனக்கு வரபோகும் ஆணோ அல்லது பெண்ணோ முறையான மருத்துவ பரிசோதனை சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று முழு தைரியத்துடன் கேட்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் ரத்த பரிசோதனை சான்றிதலையாவது கேட்கலாம். இது ஓரளவு எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகளிலிருந்து தன் குடும்பத்தை காக்க ஓரளவு வழியாக அமையும் .

தாம்பத்யம் என்பது இல்லறத்தில் ஒரு பகுதிதான் என்றாலும் , அதுவே ஒரு குடும்பத்தை பிரிக்கும் அளவுக்கு ஒரு பெரிய சக்தியாக வளர்த்து நிற்கும் பொழுது மேலே கேட்க தூண்டும் கேள்விகள் தப்பு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

சமீபத்தில் செய்தித்தாளில் வந்த ஒரு நிகழ்வு படிக்கச் சற்று சந்தோசமாக இருந்தது. ஒரு திருமண மண்டபத்தில் எந்த ஒரு திருமணம் நடந்தாலும் , திருமணத்திற்கு முன்பு ஆண் மற்றும் பெண்ணிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்களாம். அவ்வாறு ஒரு திருமணத்தின் பொது மன ஆணுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்க பட்டு பின்பு திருமணத்தை நிறுத்தினார்களாம். இல்லைஎன்றால் அந்த பெண்ணின் வாழ்கை கேள்விக்குறியே?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்

Saturday, March 21, 2009

பார்த்ததும் காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் - சிறு ஒப்பிடு

பார்த்ததும் காதல் தோன்றி காதல் செய்பவர்களை பார்த்தால் முன்பெல்லாம் ஏற்று கொள்ள மனம் மறுத்ததுண்டு. அது எப்படி பார்த்ததும் காதல் தோன்றும் ? அவ்வாறு தோன்றினாலும் அது எவ்வாறு நிலைக்கும் ? ஒருவருடைய குணாதிசயங்கள் தெரியாமல் ஒருவரை காதல் செய்வது என்பது சரியானதா ? என்றெல்லாம் சிந்தித்தது உண்டு.

ஆனால் அதுவே இங்கு நடக்கும் திருமண முறைகளை பார்க்கும் பொழுது " பார்த்ததும் காதல் என்பதற்கும் ,இங்கு நடக்கும் திருமண முறைகளுக்கும் " பெரிதாக வித்தியாசம் இருப்பதாக தெரிய வில்லை.

இங்கு திருமணம் எவ்வாறு நடைபெறுகிறது?

ஆண் வீட்டிலிருந்து பெண் வீட்டுக்கு ஒரு புகைபடம் , அது போல் பெண் வீட்டிலிருந்து ஒரு புகைப்படம் ஆண் வீட்டிற்கு . ஆண் , பெண் படத்தை பார்கிறான். அழகாக இருக்கிறாளா , அவன் நினைத்தவாறு இருக்கிறாளா என்று பார்த்து விட்டு அவ்வாறு இருந்தால் சரி என்று சொல்கிறான். அது போல பெண் , அவன் படத்தை பார்த்து ஸ்மார்டாக இருக்கிறானா என்று பார்த்து விட்டு சரி என்று சொல்கிறாள் . இருவீட்டிலும் சரி என்றால் அடுத்த கட்ட பேச்சுக்கு தயாராகி இறுதியாக திருமணத்தில் சென்று முடிகிறது.

கூட்டி கழித்து பார்த்தால் இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக தெரிவதில்லை. பெண் பார்க்க செல்லும் பொது , எவ்வளவு பெரிய வாயாடியாக இருந்தாலும் அல்லது அடங்கா பிடாரியாக இருந்தாலும் , சாதுவாக , அமைதியாக நின்று விட்டுத்தான் செல்லும். அதை வைத்து எவ்வாறு பெண்ணின் குணாதிசயங்களை நிர்ணயிக்க முடியும்?

அதுபோல் எவ்வளவு பெரிய தண்ணி லாரியாக இருந்தாலும் , அவன் அந்த இடத்தில் சாந்த சொருபியாக இருந்து விட்டுத்தான் செல்வான். இதை வைத்து எவ்வாறு ஆணின் குணாதிசயங்களை நிர்ணயிக்க முடியும்? ஆனால் இவ்வாறுதான் திருமணம் நடந்து கொண்டு இருக்கிறது இந்த நாட்டில்.

இவ்வாறு விவாதித்தோம் என்றால் சில பேர் இவ்வாறு சொல்வதுண்டு. குடும்பத்தின் பின்னணியை வைத்துதான் நாங்கள் பெண்/ ஆண் தீர்வு செய்கிறோம். அந்த குடும்பத்தில் பிறந்த பெண்/ ஆண் தவறானவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று.

இது சாத்தியம்தானா? நல்ல பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள் அனைவரும் நல்லவர்களாகத்தான் வளர்கிரார்களா? அல்லது தாய் , தந்தை கெட்ட வழியில் சென்றாலும் அவர்களிடம் வளரும் குழந்தைகள் அனைவரும் கெட்டவர்களாக தான் வளர்கிரார்களா? ஆக தாய் தந்தையரை வைத்து பிள்ளைகளை தரம் பிரிப்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஆக ஒருவரை பற்றி ஒருவருக்கு சரியாக தெரியாமல் , மாத வருமானம் மற்றும் குடும்ப பின்னணியை வைத்து நடக்கும் திருமணம் சரிதானா?

என்னை பொறுத்த வரையில் இங்கு நடக்கும் திருமண முறைகள் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு திருமணம் நடந்து பின்பு ஒருவருக்கு ஒருவர் பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து வரை போகும் மக்களை எண்ணி விட முடியும். இன்னும் சில குடும்பங்களில் விவாகரத்து என்று பேசினாலே குடும்ப மானம் போய்விடும் என்று சொல்லி , அந்த வாழ்கையை விட்டு வெளியேறவும் முடியாமல் , வாழவும் பிடிக்காமல் வாழ்ந்து செத்து கொண்டிருக்கும் பெண்கள் எத்தனையோ பேர். இதற்குள் குழந்தை பிறந்து விட்டால் , அவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருபவர்கள் நிறைய பேர்.

ஆக இங்கு நடக்கும் திருமண முறைகள் சரிதானா என்பதில் எனக்கு எப்பொழுதும் ஒரு குழப்பம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த முறை சரிதான் என்றால் , பார்த்ததும் காதல் என்பதை நாம் என் ஏற்று கொள்ள மறுக்கிறோம்?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்.

Sunday, March 15, 2009

படித்ததில் பிடித்தது - ஓர் கொலை வெறி ஸ்டோரி

தன் மகளின் அறையை கடந்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய, சட்டென நின்றார் அருள். உற்று நோக்கிய போது, எப்போதும் இல்லாமல் அறை மிக சுத்தமாக இருந்தது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடங்களில் இருந்தன. ஏதோ நெருட அறைக்குள் சென்ற அருளின் கண்களில் தலையணை மீது இருந்த கடிதம் தென்பட்டது.
'அன்புள்ள அப்பாவுக்கு' என்று அதில் எழுதியிருந்தது. சற்றும் தாமதிக்காமல் கடிதத்தை பிரித்து படிக்கலானார்
அன்புள்ள அப்பா,
இதை மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன். உங்களை பிரிவதில் எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது, ஆனால் வேறு வழியில்லை. நான் வீட்டை விட்டு போகிறேன். உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை. ஆமாம்பா, நான் என் காதலன் வெற்றிசெல்வனுடன் இந்த ஊரை விட்டு போகிறேன்.
வெற்றியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரும் என்னை மிகவும் காதலிக்கிறார். சந்திக்கும் போது உங்அளுக்கும் அவரைப் பிடிக்கும். கைலி கட்டிக்கொண்டு, அழுக்குச்சட்டையுடனும் முரட்டு தாடியுடனும் அவர் காட்சியளித்தாலும் மிகவும் பாசமானவர். அது மட்டும் இப்போ காரணமில்லை அப்பா, நான் இப்போது கருவுற்று இருக்கிறேன். வெற்றிக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும்,
நான்கு குழந்தைகளும் இருந்தாலும், இந்த குழந்தையையும் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள
வேண்டும் என்று சொல்கிறார். ஐம்பது வயதில் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதில் பெருமிதம் அவருக்கு.
வெற்றி ஒரு காட்டில் தான் வாழ்கிறார். அதிகம் பணம் இல்லையென்றாலும் கஞ்சா வளர்த்து நிறைய செல்வம் சேர்க்கலாம் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், சீக்கிரமே எய்ட்ஸீக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டால் அதை வெற்றிக்காக வாங்கவும் அந்த பணத்தை நாங்கள் பயன்படுத்திகொள்வோம்.
எனக்கு 16 வயதாகிறது அப்பா. என்னால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. கவலைக்கொள்ள வேண்டாம். சீக்கிரமே உங்கள் பேரக்குழந்தைகளுடன் உங்களை காண வருவேன்.
உங்கள் அன்பு மகள்,
இளவேனில்

படப்படப்புடன் படித்துக்கொண்டிருந்த கடிதத்தில் 'திருப்புக' என்று எழுதியிருந்ததையும் கவனித்தார் அருள். புரட்டிப்பார்த்த போது அதில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது

அப்பா,
நீங்கள் படித்தவற்றில் எதுவும் உண்மையில்லை. நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ மோசமான விசயங்கள் நடக்கலாம் என்று உங்களுக்கு நினைவுகூறவே அந்தக்கடிதத்தை எழுதினேன். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மேசை மீதிருக்கும் என் தேர்வு அறிக்கை எவ்வளவோ மேல் என்று தோன்றலாம். அதை பார்த்துவிட்டு, கையொப்பம் இடலாம் என்று தோன்றினால் என்னை அழைக்கவும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா..

Saturday, March 7, 2009

இப்ப சந்தோசமா உங்களுக்கு - ஐ.டி துறையின் வீழ்ச்சி

தமிழ் MA , அறை எண் 305 கடவுள் போன்ற படம் எடுத்தவர்களுக்கு மற்றும் அந்த படங்களை ரசித்தவர்களுக்கும் சந்தோஷமான காலம் என்றே நினைக்கின்றேன். காரணம் ஐ.டி துறையின் வீழ்ச்சி.

பொதுவாக ஐ.டி துறையில் வேலை பார்க்கும் மக்களை பார்த்தாலே ,மற்றவர்கள் பொறாமையுடனும் , தப்பான கண்ணோட்டத்துடனும் பார்கிறார்கள். அவர்கள் செய்த தவறுதான் என்ன?

பொதுவான காரணம் அவர்கள் மற்றவர்களை ஒப்பிடும் பொழுது அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அதிகம் செலவு செய்கிறார்கள் என்று. மேலே குறிப்பிட்ட படத்தை எடுத்தவர்கள் கூட அதே கருத்தை வலியுறுத்தி இருப்பார்கள். இவ்வாறு எடுத்த படத்தின் இயக்குனரிடம் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றே ஒன்றுதான்.

*) இவர்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு, இரண்டாவது படத்திற்கு வாங்கும் சம்பளம் ஆயிர கணக்கிலா அல்லது கோடி கணக்கிலா?

*) இந்த படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் ஆயிர கணக்கிலா அல்லது கோடி கணக்கிலா?
இவர்கள் இவ்வாறு வாங்கி கொண்டு ஐ.டி துறையை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது? அதுவும் உச்ச கட்டமாக ஐ.டி துறையில் வேலை பார்ப்போறின் கை முடமாகி போவது போல படத்தில் காட்டுவதை என்னவென்று சொல்வதென்றே தெரிய வில்லை.

தவ்று அனைவரிடமும்தான் இருக்கிறது. ஒருவரை மற்றும் குறை கூறுவதில் எந்த புண்ணியமும் இல்லை. ஐ.டி ஊழியன் ஒருவன் ஆட்டோ பிடிக்க சென்றால் , அவனை பார்த்த மாத்திரத்தில் சாதாரண தொகையை விட இரண்டு மடங்காக கேட்பது ஆட்டோ காரரின் குற்றமா அல்லது ஐ.டி ஊழியனின் குற்றமா?
ஐ.டி ஊழியன் வீடு வாடகை எடுக்க சென்றால் , வாடகை தொகையை இரண்டு மூன்று மடங்காக கேட்பது யாரின் குற்றம்?

ஆனால் இப்போது ஐ.டி துறையில் சம்பள குறைப்பு நடந்து கொண்டு இருக்கிறது. வேலை இழப்பு என்பது சாதாரண விசயமாகி விட்டது. இப்பொழுது இவர்கள் ஏற்றிய வாடகை தொகையை குறைத்து விடுவார்களா ? இதை தட்டி கேட்பது யார்?

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் மேல் தட்டு மக்கள் அல்ல..சாதாரன குடும்பத்தில் பிறந்து , படித்து இன்று நல்ல நிலையை பிடிக்க போராடி கொண்டு இருப்பவர்கள் தான். பொதுவாக கீழ் தட்டு மக்கள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம்.. பொருளாதார சூழ்நிலை மாற வேண்டும் என்று ஊர் முழுவதும் மார்தட்டி கொள்கிறோம்.... ஆனால் அந்த நிலையை ஒருவன் எட்டினால் ஏற்று கொள்ள மறுக்கிறோம்...என்ன காரணம்?

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்பது இதுதானோ?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்

Monday, February 23, 2009

கிடைத்து இருக்குமா ஆஸ்கர் இந்த திரைப்படத்தை இந்தியர் இயக்கி இருந்தால் ?

உண்மையிலேயே இந்த படத்தை ஒரு இந்தியர் இயக்கி இருந்தால் இந்த வரவேற்பு மற்றும் ஆஸ்கர் கிடைத்து இருக்குமா என்பது கேள்விக்குறியே ?

உதாரணம் ரஹ்மான் இசை அமைத்த " லகான் " படத்திற்கு இந்த அளவு வரவேற்பு இல்லை உலக அளவில் என்பது உண்மை மற்றும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்க பட்டு பின்னர் வெளியேற்ற பட்டது.

ரஹ்மானின் மற்ற படங்களை ஒப்பிடுகையில் இந்த படத்தின் இசை சுமார் என்பதே எனது கருத்து. ஆனால் இந்த படத்திற்கே இந்த அளவு வரவேற்பு உலக அளவில் என்றால் அவரின் மற்ற படங்களை உலக அளவில் எடுத்து சென்றால் அவரின் மதிப்பு என்னவென்று கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை.

இன்று உலக அளவில் பெரிய இசை வல்லுனர்களாக காட்டி கொள்ளும் பல பாப் பாடகர்கள் ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு ஆல்பத்தை வெளியிட்டு தன்னுடைய புகழை உலகம் முழுவதும் பறை சாற்றி கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய இசை அமைப்பாளர்கள் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களுக்கு இசை அமைத்து , அனைத்து படங்களிலும் ஆறு பாடல்களுக்கு மேல் இசை அமைத்து இன்னும் இந்திய அளவிலே மட்டும் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

எனினும் இந்த விருது , இந்திய இசை அமைப்பாளர்களை உலகம் முழுவதும் தெரிந்து கொள்வதற்கு முதல் படியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்னும் "இளையராஜா " போன்ற பெரிய ஜாம்பாவனை உலகம் அறியாமல் இருப்பதில் ஒரு சின்ன வருத்தம் இருந்தாலும் , இது ஒரு நல்ல தொடக்கம் என்பதே உண்மை.

வளர்க ரஹ்மான் புகழ்.

ப.பிரதீப்
வீழ்வது வெட்கம் அல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்.