Saturday, December 5, 2009

அப்படி இருந்தால் அவர் கடவுளா?

சிறு வயதிலிருந்தே கிறிஸ்தவனாக வளர்ந்தவன் நான். ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் என் அப்பா இந்து , அம்மா கிறிஸ்டின். அம்மாவுக்கு பற்று கிறிஸ்தவ மதத்தில் அதிகம் என்பதால் நானும் இந்த மததிலேய வளர்த்தேன் , தாயை போல பிள்ளை என்பது போல. ஆனால் சமீப காலமாக இந்த மதத்திலும் சரி, இல்லை எந்த மதத்திலும் சரி , மனது சரியாக ஒத்து போவது இல்லை. நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் , புது நன்மை என்ற சடங்கை பற்றி தெரிந்து இருக்கும்.மற்ற மதத்தவருக்கும் இதை பற்றிய தெளிவு இருக்கும் என்று நினைக்கிறன். ஒரு சின்ன அப்பத்தை பிட்டு நாக்கில் வைப்பார்கள், இதைதான் புது நன்மை என்று குறிபிடுவார்கள். நான் புது நன்மை வாங்கிய பிறகு, சில நேரம் வாங்குவேன் , சில சமயம் வாங்க மாட்டேன். ஆனால் நான் வாங்காத நாட்களில் என் அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டி கொள்வேன். அதனால் பிடிக்கிறதோ இல்லையோ , இதை வாங்கி விடுவதை ஒரு கடமையாக செய்து விடுவேன்.

இங்குதான் சங்கடமே ஆரம்பிக்கிறது , அந்த அப்பத்தை கொடுக்கும் முன்பு கோவிலில் , கிறிஸ்தவர்கள் மட்டுமே இதை வாங்க வேண்டும் என்று குறிபிடுவார்கள்.
- ஏன் இதை கிறிஸ்தவர்கள் மட்டும் வாங்க வேண்டும்?
- மற்ற மதத்தினர் வாங்கினால் என்ன தவறு ? அல்லது கொடுபதினால் என்ன தவறு?
- இயேசு கோபித்து கொள்வாரா? அல்லது இயேசு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தானா? அப்படி இருந்தால் அவர் கடவுளா?

இதை கொடுக்காமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம். ஆனால் கொடுபதினால் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து. அந்த காலத்தில் இயேசு, சில மீன் துண்டுகளை வைத்து ஊருக்கே பகிர்ந்து கொடுத்தார் என்று விவிலியத்தில் சொல்வது உண்டு. அப்படி இருக்க, இந்த சிறு அப்பத்தை கூட மற்றவர்களுக்கு பகிர்த்து கொடுக்காத இந்த மத கோட்பாடுகள் ஏற்று கொள்ள படாத ஒன்றாகவே எனக்கு படுகிறது.

பிரச்சினையே இங்குதான் இருக்கிறது. நாம் கடவுளை கடவுளாக பார்ப்பதே இல்லை. அவரையும் மனிதராகத்தான் நாம் பார்க்கிறோம். மனிதராக பார்பதினால்தான், இன்னமும் தேவை இல்லாமல் நம்மை வருத்தி, அவரிடம் நாம் , எனக்கு இதை செய், அதை செய் என்று கேட்டு கொண்டு இருக்கிறோம். மனிதரிடம்தான் இந்த பண்பு உண்டு. உனக்கு நான் அதை செய்தேனே, எனக்கு நீ இதை கூட செய்ய மாட்டாயா? என்றெல்லாம் நாம் கேட்பது உண்டு.

இன்னமும் வேளாங்கண்ணி கோவிலில் சென்று பார்த்தீர்களேயானால் , முட்டி போட்டு ஒரு இடத்திலிருந்து கோவிலை சென்று அடையும் வரை, மணலில் தன்னை வருத்தி, வேண்டுதல் நிறைவேற்றி கொண்டு இருப்பார்கள் அல்லது தனக்கு ஏதாவது கேட்டு கொண்டு இருப்பார்கள். கோவிலை சென்று அடையும் பொழுது அவர்கள் முட்டியில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும். இந்த வேதனையில் இருந்து வெளிவர அவர்களுக்கு எப்படியும் மாத கணக்கு ஆகும். இப்படி எல்லாம் வேண்டுதல் கடவுள் கேட்கிறாரா? அல்லது அப்படி வருத்தி ஏதாவது செய்தால்தான் கடவுள் நமக்கு செய்வாரா? அப்படி செய்தால் அவர் கடவுளா? . இதை பற்றி நண்பர் joe கூட ஒரு பதிவு எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

கிறிஸ்தவ மதத்தில் மட்டும் இது மாதிரியான சம்பவங்கள் நடப்பது இல்லை..எல்லா மதத்திலும் இப்படி தேவை இல்லாத இந்த அநியாங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. என அண்ணனின் நண்பர் ஒருவர், அவருக்கு ஒரு தேவை நடக்க வேண்டும் என்று நினைத்து , ஒரு இந்து கோவிலுக்கு சென்று தன கையில் சூடத்தை ஏற்றி அது அனையும்வரை கையில் ஏந்தி நின்று கொண்டு இருந்தார். அவருக்கு அவர் வேண்டியது நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய அன்றாட வேலைகள் ஒன்று கூட நடக்கவில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அவரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு "நம்பிக்கை" தான் என்று கூறினார். இதன் பெயர்தான் நம்பிக்கையா? எனக்கு புரியவில்லை!!!!!!.

நான் முன்பே கூறியது போல, எனக்கு எந்த மதத்திலும் இப்பொழுது நம்பிக்கை இல்லை. என் அப்பாவின் மதமான இந்து மதத்தில் முற்றிலுமாக எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் கீழ்வரும் இந்த மூன்று காரணங்கள் தான்.
1 ) மத சடங்குகள்.
2 ) கோட்பாடுகள்.
3 ) முக்கியமாக ஜாதி.

ஜாதியை அங்கீகரிக்கிற எந்த மதமும் , மதமே இல்லை என்பதே எனது கருத்து. தாயின் முன் , அவளுடைய அனைத்து குழந்தைகளுமே அவளுக்கு சமம்தான். அப்படி இருக்க, அது எப்படி ஒரு மதத்தில் இருந்தே ஒருவரை உயர்ந்தவராகவும் , மற்றவரை தாழ்ந்தவராகவும் பார்க்க முடியும். எனக்கு தெரிந்து கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அப்படி இருக்க வாயப்பு இல்லை. இடைசெருகல்கல்தான் அனைத்து மதத்திலும் அதிகமாக இருக்கின்றன. இது அனைவர்க்கும் தெரியும். ஆனால் யாரும் அதை ஏற்று கொள்வதும் இல்லை, அல்லது கண்டு கொள்வதும் இல்லை.

உதாரணத்திற்கு ஜாதி இல்லை என்பது அனைவர்க்கும் தெரியும், காரணம் , ஒருவர் பல நாள் நமக்கு கீழ் வேலை பார்த்து விட்டு , திடிரென்று நமக்கு நிகராக வருவதை, நம்மால் ஏற்று கொள்ள முடிவது இல்லை. அதேதான் ஜாதியிலும் நடக்கிறது. இவ்வளவு நாள் நம்மை விட தாழ்ந்த ஜாதி என்று இருந்தவன், திடிரென்று நமக்கு நிகர் என்று சொல்லி கொள்வதை யாரும் விரும்புவது இல்லை. அதனால்தான் ஒவ்வொரு ஜாதியினரும், இந்த ஜாதி நம்மை விட தாழ்ந்தது என்று சொல்லி கொண்டு ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் தாழ்த்த ஜாதியில் கூட இந்த இந்த பிரிவு இருக்கிறது. அந்த பிரிவில் உள்ளவர்கள், இவன் நம்மை விட தாழ்ந்தவன் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்க ஜாதி எப்படி ஒழியும்? முடியாத செயல் என்றே தோன்றுகிறது. இந்த காலத்திலும் ஜாதியை வைத்து கொண்டு, கோவிலுக்கு மற்றும் பல இடங்களில் அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது ஏற்று கொள்ள முடியாததாகவே இருக்கிறது........அங்கீகாரம் கிடைக்காத எந்த இடத்திலும் நாம் எதிர்த்து போராட வேண்டும்.........

முன்பே சொன்னது போல, ஜாதியை அங்கீகரிக்கிற எந்த மதமும் , மதமே இல்லை. அதனால் தான் அம்பேத்கர் கூட, கடைசி நாட்களில் புத்த மதத்தை தழுவினார். ஆக, இடை செருகல்களை அகற்றுவோம். தேவை இல்லாததை வளர்த்து விடாமல் , மனிதத்தை வளர்ப்போம்.