Monday, November 7, 2011

கடுப்பேதுராங்க மை லார்ட் !!!

7 ம் அறிவு படத்த பார்த்துட்டு பல பேரு பல கமெண்ட்ஸ் குடுத்துகிடுதான் இருக்காங்க. சில பேரு படம் சூப்பர் அப்படினும், சில பேரு படம் மொக்கனும், இன்னும் சில பேரு தமிழனு நினைக்கும் போது பெருமையாவும் இருக்குனு சொல்றாங்க. முருகதாஸ் இந்த படத்த பத்தி சொல்லும் போது, இந்த படத்த பார்த்துட்டு நீங்க தமிழனு நினைக்கும் போது ஒரு திமிரு இருக்கும்னு சொல்றாரு. ஆனால் எனக்கு என்ன தோனுதுனா, ஏன் இந்த இன வெறி? ஏன் இந்த மொழி வெறி?

மொழி ங்கிறது ஒரு தகவல் தொடர்பு சாதனம் அவ்வளவுதான். தமிழ் மொழி பழமையானது, வரலாறு மிக்கது.சரி ஒத்துகிறேன்.ஆனால் அத சொல்லிகிட்டே இருக்குறதுனால, அந்த மொழி பேசுற நான் தமிழன் அப்படின்னு சொல்லிகிரதுல என்ன வந்துற போதுன்னு எனக்கு தெரியல. இதுல என்ன திமிரு இருக்கு இல்ல இதுல என்ன பெருமிதம் இருக்கு. ஜஸ்ட் அது ஒரு மொழி அவ்வளவுதான. தமிழ் மொழி பேசுரவந்தான் பெருமையான்வனு நினச்சா...பிறவியிலேயே வாய் பேச முடியாதவங்க, இல்ல பிறவியிலேயே காது கேட்காதவங்க,இல்ல மொழிந்கிரதையே உணர முடியாத நிலையில உள்ளவங்கள எப்படி நீங்க பார்குறிங்க? அவங்க வாழ்வதற்கு உரிமையே இல்லாதவங்களா? அவங்களுக்கு பாவம் மொழிந்கிறதே என்னனு தெரியாது....அவங்கல என்ன பண்ணலாம்? அவங்களுக்கு எல்லாம் திமிரே இருக்க கூடாதா?

எனக்கு என்னமோ இப்படிதான் எல்லாமே தொடர்கிரதொனு தோணுது...நீங்க மொழில தமிழ் மொழிதான் உயர்ந்தது அப்படின்னு சொல்றிங்க....உடனே இன்னொருத்தன் என்ன பண்ணுவான் அப்படினா ஜாதில ஏன் ஜாதி தான் உயர்ந்தது னு சொல்லுவான்..இன்னொருத்தன் மதத்துல என் மதந்தான் உயர்ந்ததுனு சொல்லுவான். அப்புறம் எல்லாம் அடிச்சிக்கிட்டு சாக வேண்டியதுதான்.இது ஒரு பொழப்பா ?

சரி...அப்படியே தமிழ் , தமிழ் னு சொல்றவங்கனாசும் உண்மையா இருகிங்களா ..அதுவும் இல்ல....ஈழ தமிழர்களுக்கு நம்ம என்ன பண்ணிட்டோம்....அப்பப்ப சவுண்ட் கொடுப்போம்...சூடு ஆரிருசுனா மூடிகிட்டு இருப்போம்..இதுதான நடக்குது.....வேற எதாச்சும் இத மீறி நடந்துருச்சா....இல்ல இந்த படத்த எடுத்த முருகதாஸ் தான் உண்மையா இருக்காரா......தமிழ் படத்துல போதி தர்மர் தமிழர்னு சொல்றிங்க.....தெலுகு ல அவர வேற மாதிரி ப்ராஜெக்ட் பன்றிங்கனு சொல்றாங்க..இது தேவையா.....? தமிழ், தமிழ் னு சொல்றவரு என் ஹிந்தி ல போய் படம் எடுக்குரிங்க? தமிழ் மொழிலேயே எடுக்க வேண்டியதுதான....போதி தர்மர வச்சி , நாம தமிழர்னு பெரும படுறதா சொல்றிங்க....ஆனால் அந்த போதி தர்மர் தமிழருக்கு ஒன்னும் பண்ண மாதிரி தெரியல....அவர் என்னடானா சீனா நாட்டுக்கு போய் அங்க போய் எல்லாம் கத்து குடுத்துகிட்டு இருகாரு. எனக்கு என்னமோ அவர் கரெக்டாதான் இருக்குற மாதிரி தோணுது...நம்மதான் அவர தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறோம்.

இதுலந்த ஒன்னும் மட்டும் புரியுது....தமிழரா நடித்துரிகுற சூர்யா வ சாகடிகுனும்னா விசத்த கலந்து கொடுத்தா காலி பண்ணிரலாம் போல...நானும் "நந்தா" படத்துழந்து பார்க்குறேன்...மனுசன இப்படியே சாகடிசிகிடு இருக்காங்க.

ஆக, இது மாதிரி தயவு செஞ்சு மக்களை உசுபேத்துரத நிறுத்துங்க சார்......நீங்க தூக்கி வச்சி ஆடுற தமிழ் இனத்துல முட்டாள் தனமா முடிவு எடுக்குற சில மக்கள் இருக்குறாங்க ..முத்து குமார் மாதிரி, சமீப காலத்துல தீகுளிச்சி இறந்து போன அந்த பொண்ணு மாதிரி....தேவ இல்லாம சில பேர நீங்களே உருவாகாதிங்க....


இது மாதிரி இந்தியா ல இன்னொரு கும்பல் செம்மைய கடுபேதிகிட்டு இருக்காங்க....யாருன்னு கேட்குரிங்கலா....அவர பத்தி ஒரு tag line குடுத்தா புரிஞ்சிரும்னு நினைக்கிறன்....."அவர் கொஞ்ச நாள் முன்னாடி சாப்பிடாம பேசிக்கிட்டு இருந்தாரு.....இப்ப பேசாம சாப்பிட்டுகிட்டு இருகாரு..." அவரேதான் அன்னா ஹசாரே தான்.மனுஷன் ஏதாவது ஒரு விரதம் எடுக்காம இருக்க மாட்டாரு போல..... இவரும், இவர் கும்பலுல இருக்குறவங்க சேட்ட தாங்க முடியல. இவருக்கு இந்தியா முழுவதும் ஆதரவு வேற. ஒரு 5 பேர் சேந்துகிட்டு உண்ணாவிரதம் இருப்போம்னு அரசாங்கத்த மிரட்டுவான்கலாம், அதனால இவங்க சொல்றத கேட்கனுமா....என்ன நடக்குது இங்க....

ஊழல ஒழிக்கணும்னு சொல்றது எல்லாம் கரெக்டுதான்....ஆனால் அதற்கு ஒரு முறை னு ஒன்னு இருக்குல.....முதல ஒரு பொது நல வழக்கு போடுங்க...இது மாதிரி ஒரு சட்ட மசோதா கொண்டு வரணும்னு.....ஒத்துகலனா ..அதுக்கப்புறம் நீங்க உண்ணாவிரதம் இருங்க.....எதுவுமே பண்ண மாட்டிங்க.....ஆனால் நீங்க சொல்றத எல்லாம் கேட்கனும்னா எப்படி ? தமிழ் நாடுலயும்தான் சமசீர் கல்வி கொண்டு வர கூடாதுன்னு சொன்னங்க....இங்க உள்ளவங்க எல்லாம் உண்ணா விரதமா இருந்தாங்க?....பொது நல வழக்கு போட்டாங்க...அவங்களுக்கு தீர்ப்பு கிடச்சது....இப்ப சமசீர் கல்வி தமிழ் நாட்டுல இருக்கு...இது மாதிரி இந்த கும்பல் எதுவுமே பண்ணல.....ஆனால் இவங்க சொல்றத கேட்கணும்.....அது எப்படி?

பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டில சொல்லி இருப்பாரு.....எந்த ஊழல் சட்டம் கொண்டு வந்து ராஜா, கனிமொழி எல்லாம் சிறையில இருக்காங்கனு? ஆக சட்டம் எல்லாம் கரெக்டான் இருக்கு.....அரசாங்கம்தான் சரியா இருக்கனும்.....அத மாத்துறதுக்கு நீங்க பிரசாரம் பண்ணுங்க....இல்ல நீங்களே நல்ல ஆளுங்கள தேர்வு பண்ணி தேர்தலுல நில்லுங்க....அத விட்டு நீங்க கடந்த தேர்தலுல பிஜேபி ஓட்டு போடுங்கனு சொல்றது சரியா படலையே சார்? பிஜேபி என்ன அவ்வளவு நல்ல கட்சியா? மத வெறி பிடிச்சி பாபர் மசூதிய இடிகிரதுகு ஆழ கூட்டிட்டு போய் அத இடிச்சி, அத தலைமை தாங்கி நடத்திய அத்வானிக்கு ஆதரவு தர சொல்றது எந்த விதத்துல நியாயம் அப்படின்னு தெரியல ?

சரி அந்த கும்பலுல ஒருத்தரா இருக்குற....கிரண் பே(கே)டி மேல இப்ப சுமத்துன குற்றத பார்த்தா இன்னும் கேவலமா இருக்கு....விமான சீட்டுல கொடுத்த காசுல காச அடிச்சிட்டு....அத நான் use பண்ணல...என்னோட டிரஸ்ட் க்கு தான் use பண்ணேன்னு சொன்ன எப்படி ஒத்துக்க முடியும்..? வடிவேலு சொன்னதுதான் நியாபகம் வருது....."ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்டினியா ?" அது மாதிரி "மத்தவங்க பண்ணா ஊழல்...நீங்க பண்ணுனா பொது நலமா?" என்ன லாஜிக் இதுன்னு புரியல.....இந்த கும்பலுக்கு இந்தியா முழுவதும் எப்படி ஆதரவு தந்தாங்கனுதான் புரியல.....ஆனால் அந்த விசயத்துல அன்னா ஹசாரே தன்னுடைய 7 ம் அறிவையும், நோக்கு வர்மதையும் use பண்ணி மக்களை கவர்ந்துடாருனு நினைக்கிறன். ..

Saturday, August 6, 2011

திலீபன் - ஒரு சகாப்தம் !!!

எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் தனது 25 வது வயதில் கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க சார்பில் நின்று, மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையை எதிர்த்து போட்டியிட்டார். அவர் அந்த தேர்தலில் தோற்றாலும் கணிசமான வாக்குகளை பெற்று அனைவராலும் கவனிக்க பட்டார்.அவர் பெயர் இராமச்சந்திரன்.Lawyer ஆக திருச்சியில் தற்போது பணியாற்றி கொண்டு இருக்கிறார். கவுன்சிலராக தேர்தலில் நிற்பது என்பது சாதாரண விசயமாக இருந்தாலும் தன்னுடைய 25 வயதில் அந்த பதவிக்கு நிற்க வேண்டும் என்று தோன்றியதும், அதற்காக உழைத்து கணிசமான வாக்குகளை பெற்றதும் என்னை பொறுத்த வரையில் ஒரு சாதனையே. அதை அவரிடம் நேராக கூறியும் இருக்கிறேன். எனக்கு தற்போது 29 வயது. 4 வருடங்களுக்கு முன்பு என்னால் அது மாதிரி யோசிக்க முடிந்ததா என்று யோசிக்கும் பொழுது, இல்லை என்கிற பதிலே எனக்கு தோன்றுகிறது. அப்படியே நின்றாலும் அந்த சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடிகின்ற அளவுக்கு எனக்கு மனபக்குவம் இருந்திருக்குமா என்றாலும், இல்லை என்றே தோன்றுகிறது. ஆக அந்த இளம் வயதில் அவர் அதை அசால்டாக எதிர்கொண்டது ஒரு சாதனையே.

எனக்கு தெரிந்து வரலாற்றில் இளம் வயதில் தன் வயதையும் மீறி சாதித்தவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் சில பேர். பாரதியார், பகத் சிங்க், சேகுவாரா. ஆரிய குலத்தில் பிறந்து ஜாதி இல்லை என்று அந்த காலத்திலே கூறி, தொலை நோக்கு பார்வையில் சிந்தித்தவர் பாரதியார் . " இது என்ன சந்தோசம், என் பெண் கல்யாண வயதில் ஒரு கீழ் ஜாதி பையனோடு ஓடி போய் திருமணம் செய்து கொண்டால் அதுதான் எனக்கு மிக பெரிய சந்தோசம்" என்று கூறியவர். ஆனால் தன்னுடைய 39 வயதில் நோய்வாய் பட்டு இறந்து விட்டார். பகத் சிங்க், தன்னுடைய 24 வது வயதில் சுதந்திர போராட்டத்திற்காக தூக்கில் ஏறிய மாவீரன். சேகுவாரா, மக்கள் எந்த ஒரு நாட்டின் மூலையில் ஒடுக்க பட்டாலும் , அதற்காக போராடுவேன் என்று கூறி , கியூபா புரட்சியில் போராடி வெற்றியை வாங்கி தந்து , அந்த நாட்டில் கிடைத்த உயர் அமைச்சர் பதவியை துறந்து , இன்னொரு புரட்சியில் தன்னுடைய 39 வயதில் உயிர் துறந்த வீரன்.

இந்த மாவீரர்களின் வரிசையில் இருபவர்தான் திலீபன். யார் இந்த திலீபன் ? - விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவனாக இருந்து, இந்திய அரசிடம் தன்னுடைய 5 அம்ச கோரிக்கைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி, 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து , இந்திய அரசு இவருடைய கோரிக்கைகளை ஏற்காத காரணத்தினால் , உண்ணாவிரதத்தின் 12 வது நாள் முடிவில் தன்னுடைய 24 வது வயதில் உயிரை தமிழ் ஈழ மக்களுக்காக துறந்த ஒரு வீரன்தான் திலீபன். வாஞ்சிநாதன் அவர்கள் எழுதிய " தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்" என்ற புத்தகத்தை படிக்கும் பொழுது இவரை பற்றிய சில அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பு திலீபன் என்பவர் விடுதலை புலிகளின் இயக்கத்தில் இருந்த தலைவர்களுள் ஒருவர் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த புத்தகத்தை படித்த பின்பு இவரை பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. வாஞ்சிநாதன் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தின் 12 நாட்களும் திலீபனுடன் கூட இருந்து , திலீபனின் உயிர் அணு அணுவாக அவர் உடலை விட்டு பிரிவதை நேரில் கண்டவர்.

உண்ணாவிரதம் இருப்பது என்பது ஒரு விசயமாக இருந்தாலும், தன்னுடைய 24 வயதில் 5 அம்ச கோரிக்கைகளுக்காக மன உறுதியுடன் இருந்து உயிரை இழப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. அதுவும் 24 வயதில் எங்கிருந்து இவருக்கு இவ்வளவு மன உறுதியும் , மன பக்குவமும் வந்தது என்பதை நினைக்கும் பொழுது ஆச்சர்யமான ஒரு விசயமாகவே படுகிறது. பிரபாகரன் அவர்கள் இந்த இளம் வயதில் இவருக்கு அரசியல் பிரிவு தலைவர் பதவியை அளித்திருகிறார் என்றால் இவருடைய தனி தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாஞ்சிநாதன் அவர்கள் இந்த புத்தகத்தில், இவரை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். திலீபன் இந்த அற போராட்டத்திற்கு முன்பு , போரில் ஈடுபட்டு தன்னுடைய குடலில் 12 அங்குலத்தை இழந்தவர் என்பதும், ஒரு முறை சிங்கள படையினர் இவரை சூழ்ந்து , கைது செய்யும் பொழுது தனது சாமர்த்தியத்தை பயன்படுத்தி அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதையும் கூறும் பொழுது இவருடைய மன உறுதி, மன பக்குவம், ஆபத்து வரும் பொழுது அதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்கிற மன முதிர்ச்சி எந்த அளவுக்கு இருந்திருகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

"உண்ணாவிரதம்" என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை இந்த புத்தகத்தில் இருந்துதான் எனக்கு புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு முன்பு உண்ணாவிரதம் என்று கூறி இருந்தவர்கள் எல்லாம் , அவ்வபொழுது தண்ணீர் குடிபார்களாம். காந்தி அடிகளும் இதற்கு விதி விலக்கல்ல, அவரும் உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் குடிபாராம். திலீபனிடம் உடல் மோசமாக இருந்த சமயத்தில், இதை கூறி தண்ணீர் குடிக்க சொன்ன பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் " தண்ணீர் அருந்தி உண்ணாவிரதம் இருப்பது என்றால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். அப்படி இருந்து மக்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் தண்ணீரும் இல்லாமல் இருபதுதான் என்று கூறி தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்தவர்தான் திலீபன்". அதுமட்டும் அல்லாமல் , உண்ணாவிரத மேடையில் ஏறுவதற்கு முன்பாக வாஞ்சிநாதன் அவர்களிடம் , 5 நாட்கள் கழித்து ஒரு வேலை நான் சுயநினைவு இல்லாமல் போகும் சூழ்நிலையில் எக்காரணம் கொண்டும் எனக்கு மருத்துவ உதவி செய்ய கூடாது என்று கூறி சத்தியம் வாங்கி கொண்டுதான் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினாராம்.

இதை எல்லாம் பார்த்து, சற்று நம்முடைய மன பக்குவத்தை எண்ணி பார்த்தல் , யோசிக்க வேண்டிய விசயாமகவே உள்ளது. நாம் காலேஜ் படிக்கும் பொழுது , பள்ளியில் நாம் நடந்து கொண்ட முறையை யோசித்து பார்க்கும் பொழுது சிரிப்பாகவும் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. காலேஜ் முடித்து வேலையில் சேர்ந்த நாட்களில் , காலேஜ் நாட்களில் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. இன்னமும் 5 வருடங்கள் கழித்து வேலைக்கு சேர்ந்த நாட்களை யோசித்து பார்த்தால், இவ்வளவு மோசாமாக நாம் இருந்தோமா, நமக்கு மன பக்குவம் இவ்வளவுதான் இருந்ததா என்று நினைக்க தோன்றுகிறது. எப்போதுதான் நாம் திறம் பட முடிவுகளை எடுப்போம்? எப்போது நாம் எடுக்கின்ற முடிவுகள் 5 வருடம் கழித்து யோசித்து பார்க்கும் பொழுது சரி என்று படுகிறதோ அப்போதுதான் நாம் ஓரளவு மனபக்குவதொடுதான் இருக்கிறோம் என்று நம்மை நாமே யூகிக்க முடியும் என்று நினைக்கிறன்.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது, 24 வயதில் கொள்கைக்காக உயிர் நீத்த திலீபன் ஒரு சகாப்தமே !!!!

இந்த புத்தகத்தை படிக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நண்பன் வாசுவுக்கு நன்றி :)

Sunday, June 12, 2011

சமச்சீர் கல்வி = சமம் இல்லா கல்வி !!!

இப்பொழுது ஆங்காங்கே அனைவராலும் பேசப்படும் , விமர்சிக்க படும் ஒரு செய்தி சமச்சீர் கல்வி. உண்மையில் இது தேவைதானா என்று கேட்கும் பொழுது கண்டிப்பாக தேவையான ஒன்றே. ஏற்றத்தாழ்வு என்ற வார்த்தையை கல்வியில் இருந்தும் ஒழிப்பதற்கு முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் முறை கண்டிப்பாக வரவேற்க தக்கதே.தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே விதமான பாட முறையை பயில வேண்டும் என்பது சரியான ஒன்றே. ஆனால் உண்மையில் இந்த முறையை செயல்படுத்துவதால் எந்த அளவு மாற்றம் இங்கு ஏற்படும் என்று யோசித்து பார்த்தால், பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட போவது இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழ் வழியில் அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவன், முன்பு உள்ள அதே அரசாங்க பள்ளியின் தரம் என்ன உள்ளதோ அதே போலதான் இதையும் படிக்கச் போகிறான். ஆங்கில மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவன், அங்கு உள்ள அதே தரதுடந்தான் இதையும் படிக்கச் போகிறான். ஆக, இதில் என்ன பெரிய மாற்றம் இருக்க போகிறது? பாட முறைகள் மற்றும் சமச்சீர் முறை கொண்டு வருவதினால், அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் உயர போவதும் இல்லை..அதே போல மெட்ரிக் மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் குறைய போவதும் இல்லை.

உதாரணத்திற்கு, தமிழ் வழியில் 12 வது படிக்கும் மாணவன், அவனுக்கு உள்ள ஆங்கில பாடத்தில் வரும் essay வை இன்னும் மனபாடம் செய்து கொண்டுதான் தேர்வில் எழுதி கொண்டு இருக்கிறான் அது பாட்டி வடை சுட்ட கதையாக இருந்தாலும் கூட. இது கேவலமான ஒரு விஷயம் அல்லவா!! அவன் 12 வது முடித்து வெளியே வரும் பொழுது "what is your name ? மற்றும் how old are you ? வை தவிர வேறு ஆங்கில வார்த்தைகளை பேச தெரியாது. ஆனால் ஆங்கில அல்லது மெட்ரிக் பள்ளியில் UKG படிக்கும் குழந்தையிடம் ஆங்கிலம் நம்மால் பேச இயலாது. இது ஒரு உதாரணமே. இது மாதிரி பல உதாரணங்களை நாம் அடுக்கி கொண்டே போகலாம்.

முதலில் அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்திட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு அரசாங்க பள்ளியின் உள்ளே சென்று அலசி பாருங்கள் அப்பொழுது அதன் தரம் என்ன என்று தெரியும். அடிப்படை வசதிகள் கூட இருக்காது. இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? எந்த ஒழுங்கு முறைகளையும் முக்கால் வாசி ஆசிரியர்கள் யாரும் பின்பற்றுவது இல்லை..இப்படி ஒழுங்கு முறை இல்லாத ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவனின் ஒழுங்கு எப்படி இருக்கும்? இது மாதிரி சில பல காரனங்களுகாகதான் அரசாங்க பள்ளிகளை முற்றிலும் உதறி தள்ளிவிட்டு தனியார் பள்ளிகளில் காலை 3 மணிக்கெல்லாம் LKG சீட்டுக்காக பெற்றோர்கள் காத்து கிடக்கும் அவல நிலை இங்கு ஏற்படுகிறது. அது மாதிரி நின்றாலும் அங்கு LKG சீட்டு கிடைபதற்கு பெரும் பாடு பட வேண்டி இருக்கிறது. சிலருக்கு அப்படி நின்றும் அந்த வாய்ப்பு எட்டுவதில்லை.

இந்த மாதிரி சில காரணங்களை பயன்படுத்தி கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தும் அட்டுழியம் கொடுமையிலும் கொடுமை. சென்னை போன்று மாநகரங்களில் LKG சீட்டுக்கு 50000 ரூபாய் வசூலிக்கும் பள்ளிகள் இருகின்றன. ஒரு பொறியியல் கல்லூரிக்கு கொடுக்கும் கட்டணத்தை LKG சீட்டுக்கு கொடுப்பது மிகவும் கேவலமான ஒரு விசயமாக படுகிறது. அப்படியே கொடுபதாக இருந்தாலும் அது ஒரு upper மிடில் classuku சாத்தியம். மற்றவர்களுக்கு அது ஒரு கேள்வி குறியே? இந்த அவல நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.

தேவை இல்லாததற்கு எல்லாம் மத்திய அரசிடம் நிதி வாங்கும் தமிழக அரசு ,இதற்கு நிதி வாங்கி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு போராட வேண்டும். மக்களுக்கு தேவை இல்லாத இலவசங்களை கொடுக்கும் அரசு, அதை எல்லாம் நிறுத்தி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு செலவிட வேண்டும். தமிழுக்கு கொடுக்கும் அதே முக்கியதுவத்தை ஆங்கிலத்திற்கும் கொடுத்து, ஒரு மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளி வரும் குழந்தையின் தரத்தோடு , அரசாங்க பள்ளியிலிருந்து வரும் மாணவனின் தரம் சமமாக இருக்க வேண்டும்.

ஆக சமச்சீர் என்பது ஒரு முதல் படியே. மாற்றம் அனைத்து வகையிலும் தேவை. அப்போதுதான் ஒரு முழுமையான ஒரு மாற்றம் அல்லது ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு கல்வி நிலை தமிழகத்தில் உருவாகும்.

எப்பொழுது அரசாங்க பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் காலையில் 3 மணிக்கு வரிசையில் நிற்கிறார்களோ,அப்பொழுதுதான் சமச்சீர் கல்வி என்ற நிலை முழுமை அடையும் !!!!

Sunday, May 8, 2011

சும்மா...................... டைம் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சென்ற வாரம் வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது ஒரு போஸ்டரை பார்த்தேன்...புனித நீராட்டு விழா என்று கூறி அந்த பெண்ணின் போட்டோ வையும் போட்டு இருந்தார்கள்....பார்பதற்கு சற்று வியப்பாகவும், அந்த சிறு பெண்ணை நினைக்கும் பொழுது சற்று வருத்தமாகவும் இருந்தது....இன்னமும் இது போன்ற கேவலமான சம்பிருதாயங்கள் நமக்கு தேவைதானா என்று....இது ஒரு பெண்ணிற்கு தேவைதான் என்று கூறி 1000 காரணங்கள் கூறினாலும், இந்த காலத்திற்கு இது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. சாதாரணமாக வீட்டில் வைத்து செய்வதை செய்து விட்டு முடித்து கொண்டால் போதுமானது என்றே தோன்றுகிறது. இதை பற்றி ஒரு தெரிந்த நபரிடம் விவாதித்த போது, ஒரு பெண் இது போன்ற விசயங்களை எதிர்பார்ப்பால், ஆகவே செய்து விடுவது நல்லது என்று கூறினார். இப்படி இது போல ஒரு பெண் வளர்ந்த பிறகு எதிர் பார்த்தால் என்றால், நாம் அந்த பெண்ணை சரியான முறையில் வளர்க்கவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

இது போன்று , ஒரு நண்பரிடம் பேசி கொண்டு இருக்கையில், நண்பரின் கல்யாணத்திற்கு போகலாம் என்று இருந்தேன்..ஆனால் அவர் போன் மட்டும் செய்து வர சொன்னார்..பத்திரிகை வைக்க வில்லை, ஆகவே நான் போகவில்லை என்று. நாம் இன்னும் இது போன்ற சில தேவை இல்லாத அல்ப தனமான விசயங்களை வைத்து கொண்டுதான் இருக்கிறோம் . ஒன்று புரியவில்லை ....நேரிலோ அல்லது போனிலோ சம்பந்த பட்ட நபரே சொல்லும் போது..அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ..ஒன்றுமே இல்லாத காகிதத்திற்கு ஏன் கொடுக்கிறோம் என்று.

இன்னும் சில பேரை பார்க்கலாம்,வேலைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்லும் போது, தான் இந்த சாதி அல்லது இந்த மதம் என்பதை அவர்கள் தன் நெற்றியில் வைத்து உள்ள சந்தனத்தின் வடிவத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். சில பேர் நிலா,நாமம் , அது இது என்று வரைந்து வைத்து தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்கள். நீங்கள் யார் அல்லது எந்த ஜாதி என்பதை இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சில சமயம் இது போன்ற நபர்களை பார்க்கும் பொழுது , அவர்களிடம் பழகாமலே அவர்களை வெறுக்க வைக்க தோன்றுகிறது. ஏன் என்று தெரிய வில்லை.

சில சமயம் ஊருக்கு ரயிலில் செல்லும் பொழுது, ஒரு சில குறிபிட்ட சந்திப்புகளில் திருநங்கைகள் ஏறி பயணிகளிடம் காசு கேட்பதை பார்த்து இருக்கலாம். அவர்களை பார்க்கும் பொழுது ஏன் இந்த சமுதாயம் அவர்களுக்கு இன்னும் ஏன் ஒரு அங்கீகாரத்தை வழங்க வில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை சில பேர் மனிதர்களாக கூட பார்ப்பது இல்லை. இயற்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது பெண்ணாகவே உருவாகிறது. (XX ). இந்த குரோமோசோமுடன் y சேரும் பொழுது அது ஆணாக மாறுகிறது. இல்லையென்றால் அது பெண்ணாக இருக்கும். சில சமயம் y உடன் சேரும் பொழுது சில குறைபாடுகள் ஏற்பட்டு உடலளவில் ஆணாகவும் , உள்ளத்தில் பெண்ணாகவும் இருந்து விடுகிறது. அவர்கள்தான் திருநங்கைகள். இந்த குறைபாட்டிற்கு அவர்கள் என்ன செய்ய முடியும். மற்ற ஊனத்தை போல இதுவும் ஒரு ஊனம் அவ்வளவுதான். என்றைக்கு விண்ணபங்களில் ஆண் , பெண் போன்று இவர்கள் இனமும் சேர்க்க படுகிறதோ ....அன்றுதான் அவர்களுக்கு விடுதலை உருவாகும்.