Sunday, June 6, 2010

ஏண்டா............ நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களா?



சமீபத்தில் திருச்சிக்கு சென்று இருந்த போது உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் ஒரு கிறிஸ்தவர்.கல்லறையில் சடலத்தை வைத்து விட்டு , செபங்கள் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, குழி தோண்டும் வேலையும் மும்மரமாக நடந்து கொண்டு இருந்தது.ஒரு வழியாக எல்லாம் முடிந்து, புதைக்க வேண்டிய நேரம் நெருங்கி கொண்டு இருக்கையில், அங்கு கூடி இருந்தவர்கள் செய்த பஞ்சாயத்துதான் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.

- இறந்தவர் பெண் என்பதால், ஒருவர் அவருடைய மூத்த பையனை கூப்பிட்டு போய் மொட்டை அடித்து விட்டு வா என்று கூறினார். இன்னொருவர், அதெல்லாம் தேவை இல்லை....உண்மையான கிறிஸ்தவன் மொட்டை அடிக்க மாட்டான் என்று கூற, இருவருக்கும் இடையே நடந்த அந்த பார்வை பரிமாற்றம் அங்கு அடித்த மதிய வெயிலை விட கொஞ்சம் உஷ்ணம் அதிகமாகவே இருந்தது.
- ஒரு வழியாக அந்த பையன் மொட்டை அடித்து விடு வர, பார்க்கிறவர்கள் அனைவரையும் முகத்தை பார்க்க சொல்லி விட்டு, சவ பெட்டியை மூடி ஆணி அடிக்க ஆரம்பித்தார் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர். அப்போது மீண்டும் அந்த உண்மையான கிறிஸ்தவன் அந்த ஊழியரிடம், எதுவாக இருந்தாலும் ஒத்தை படையில் ஆணி அடித்து முடித்து விடுங்கள், இரட்டை படை வேண்டாம் என்று கூற, அப்போது அடித்து இருந்த ஆணி 8 . சொல்லவா வேண்டும்....உண்மையான கிறிஸ்தவன் மீண்டும் வெகுண்டு எழுந்து, இன்னொரு ஆணியை அடித்தேஆக வேண்டும் என்று கூறி, 9 ஆணியை வைத்து ஒத்த
படையில் அடித்து முடித்தார்கள்.
- ஒரு வழியாக பெட்டியை கீழே இறக்கி, மண்ணை போட்டு மூடி, தண்ணியை ஊற்றி மொழுகி, ஒரு சிலுவையையும் சொருகி முடிக்க...அடுத்து.....பால் தெளிக்கும் படலம் ஆரம்பித்தது. மீண்டும் அந்த பையனை கூப்பிட்டு பால் தெளிக்க சொல்ல, அவன் பாலை தெளித்து கையை சற்று லேசாக உதறினான். அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து, ஏன் இப்படி கையை உதறினாய்? அப்படி எல்லாம் உதற கூடாது என்று சொல்லி ஆளாளுக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு தெரிந்து அந்த பையனுக்கு ( 15 வயது இருக்கும்) , அம்மா இறந்த வலியை விட , இவர்கள் செய்த கூத்தில் ஏற்பட்ட வலிதான் அதிகமாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.

என்னிடம் இருந்த கேள்வி இதுதான்......
- மொட்டை அடிப்பதற்கும் , இறந்ததற்கும் என்ன சம்பந்தம்? முடியை கொடுப்பது ஒரு தியாகமா? அல்லது வருத்தத்தை மொட்டை அடித்துதான் காட்ட வேண்டுமா?
- பாலை தெளித்து உதறியது ஒரு குற்றமா? இன்னும் இது மாதிரியான சம்பிருதாயங்கள் இருக்கத்தான் வேண்டுமா? உண்மை கிறிஸ்தவர்கள் என்று கூறும் இவர்கள், பைபிள் புத்தகத்தில் இருந்து , இது மாதிரி செய்ய சொல்லி இருக்கிறது என்று காட்ட முடியுமா....?

உண்மையில் இங்கு இருபவர்கள் எல்லாம் உண்மையான கிறிஸ்தவர்கள் தானா? அப்படி உண்மை கிறிஸ்தவர்கள் என்று கூறி கொண்டால் , திருச்சியில்
இரண்டு விதமான கல்லறைகள் இருப்பதற்கான காரணத்தை கூற முடியுமா? சில பேருக்கு தெரிந்து இருக்கும், சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை...திருச்சியில் இரண்டு கல்லறைகள் உள்ளன..ஒன்று உயர்ந்த சாதி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ..மற்றொன்று தாழ்ந்த சாதி உள்ளவர்களுக்கு. ...ஒருவன் இறந்து கல்லறையில் வைக்கும் போது கூட இந்த சாதி பிரிவினை தேவைதானா? ஒரு முறை திருமாவளவன் அவர்கள் இதை அறிந்து போராட்டம் நடத்தியதாக நியாபகம்.....அவ்வளவுதான்....இன்னமும் கிறிஸ்தவர்கள் என்று கூறி கொண்டு ஜாதியையும் , கல்யாணத்திற்கு முன்பு ஜோசியம் பார்க்கும் இவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் என்றால் ...அவர்களிடம் நான் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றுதான்....
இயேசு கிறிஸ்து என்ன ஜாதி ? என்ன கோத்ரம்? என்ன நட்சத்திரம்?




- முக்கியமாக ....அது ஒன்ன ஒத்த படை, இரட்டை படை? இறந்ததற்கு மட்டும் அல்ல....கல்யாணத்திற்கு பொண்ணு பார்பதிலும் கூட , மாப்ளைக்கு ஒத்த படையில்தான் வயது இருக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை இங்கு நிலவி கொண்டுதான் இருக்கிறது. கல்யாணத்திற்கு மொய் வைப்பது கூட (101 , 1001 ) இந்த காரனதில்தானோ?
- ஒத்த படை என்று கூறும் ஒருவர் பிறந்தது...இருவர் இணைந்ததால்தான்....அது இரட்டை படை.
- தாய் வயிற்றில் இவர்கள் இருக்கும் மாதம் 10 .....அதுவும் இரட்டை படை.
இப்படி இருக்க.....எங்கிருந்து வந்தது இந்த ஒத்த படை.......தெரிந்தவர்கள்......பதில் இருந்தால் சொல்லவும்.....

ஒன்று மட்டும் தெரிகிறது.......1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது...........
சரி புரகிறது....ஒத்த படையிலேயே சொல்ற்கிறேன்......1001 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.........