Saturday, August 6, 2011

திலீபன் - ஒரு சகாப்தம் !!!





எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் தனது 25 வது வயதில் கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க சார்பில் நின்று, மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையை எதிர்த்து போட்டியிட்டார். அவர் அந்த தேர்தலில் தோற்றாலும் கணிசமான வாக்குகளை பெற்று அனைவராலும் கவனிக்க பட்டார்.அவர் பெயர் இராமச்சந்திரன்.Lawyer ஆக திருச்சியில் தற்போது பணியாற்றி கொண்டு இருக்கிறார். கவுன்சிலராக தேர்தலில் நிற்பது என்பது சாதாரண விசயமாக இருந்தாலும் தன்னுடைய 25 வயதில் அந்த பதவிக்கு நிற்க வேண்டும் என்று தோன்றியதும், அதற்காக உழைத்து கணிசமான வாக்குகளை பெற்றதும் என்னை பொறுத்த வரையில் ஒரு சாதனையே. அதை அவரிடம் நேராக கூறியும் இருக்கிறேன். எனக்கு தற்போது 29 வயது. 4 வருடங்களுக்கு முன்பு என்னால் அது மாதிரி யோசிக்க முடிந்ததா என்று யோசிக்கும் பொழுது, இல்லை என்கிற பதிலே எனக்கு தோன்றுகிறது. அப்படியே நின்றாலும் அந்த சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடிகின்ற அளவுக்கு எனக்கு மனபக்குவம் இருந்திருக்குமா என்றாலும், இல்லை என்றே தோன்றுகிறது. ஆக அந்த இளம் வயதில் அவர் அதை அசால்டாக எதிர்கொண்டது ஒரு சாதனையே.

எனக்கு தெரிந்து வரலாற்றில் இளம் வயதில் தன் வயதையும் மீறி சாதித்தவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் சில பேர். பாரதியார், பகத் சிங்க், சேகுவாரா. ஆரிய குலத்தில் பிறந்து ஜாதி இல்லை என்று அந்த காலத்திலே கூறி, தொலை நோக்கு பார்வையில் சிந்தித்தவர் பாரதியார் . " இது என்ன சந்தோசம், என் பெண் கல்யாண வயதில் ஒரு கீழ் ஜாதி பையனோடு ஓடி போய் திருமணம் செய்து கொண்டால் அதுதான் எனக்கு மிக பெரிய சந்தோசம்" என்று கூறியவர். ஆனால் தன்னுடைய 39 வயதில் நோய்வாய் பட்டு இறந்து விட்டார். பகத் சிங்க், தன்னுடைய 24 வது வயதில் சுதந்திர போராட்டத்திற்காக தூக்கில் ஏறிய மாவீரன். சேகுவாரா, மக்கள் எந்த ஒரு நாட்டின் மூலையில் ஒடுக்க பட்டாலும் , அதற்காக போராடுவேன் என்று கூறி , கியூபா புரட்சியில் போராடி வெற்றியை வாங்கி தந்து , அந்த நாட்டில் கிடைத்த உயர் அமைச்சர் பதவியை துறந்து , இன்னொரு புரட்சியில் தன்னுடைய 39 வயதில் உயிர் துறந்த வீரன்.

இந்த மாவீரர்களின் வரிசையில் இருபவர்தான் திலீபன். யார் இந்த திலீபன் ? - விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவனாக இருந்து, இந்திய அரசிடம் தன்னுடைய 5 அம்ச கோரிக்கைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி, 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து , இந்திய அரசு இவருடைய கோரிக்கைகளை ஏற்காத காரணத்தினால் , உண்ணாவிரதத்தின் 12 வது நாள் முடிவில் தன்னுடைய 24 வது வயதில் உயிரை தமிழ் ஈழ மக்களுக்காக துறந்த ஒரு வீரன்தான் திலீபன். வாஞ்சிநாதன் அவர்கள் எழுதிய " தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்" என்ற புத்தகத்தை படிக்கும் பொழுது இவரை பற்றிய சில அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பு திலீபன் என்பவர் விடுதலை புலிகளின் இயக்கத்தில் இருந்த தலைவர்களுள் ஒருவர் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த புத்தகத்தை படித்த பின்பு இவரை பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. வாஞ்சிநாதன் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தின் 12 நாட்களும் திலீபனுடன் கூட இருந்து , திலீபனின் உயிர் அணு அணுவாக அவர் உடலை விட்டு பிரிவதை நேரில் கண்டவர்.

உண்ணாவிரதம் இருப்பது என்பது ஒரு விசயமாக இருந்தாலும், தன்னுடைய 24 வயதில் 5 அம்ச கோரிக்கைகளுக்காக மன உறுதியுடன் இருந்து உயிரை இழப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. அதுவும் 24 வயதில் எங்கிருந்து இவருக்கு இவ்வளவு மன உறுதியும் , மன பக்குவமும் வந்தது என்பதை நினைக்கும் பொழுது ஆச்சர்யமான ஒரு விசயமாகவே படுகிறது. பிரபாகரன் அவர்கள் இந்த இளம் வயதில் இவருக்கு அரசியல் பிரிவு தலைவர் பதவியை அளித்திருகிறார் என்றால் இவருடைய தனி தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாஞ்சிநாதன் அவர்கள் இந்த புத்தகத்தில், இவரை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். திலீபன் இந்த அற போராட்டத்திற்கு முன்பு , போரில் ஈடுபட்டு தன்னுடைய குடலில் 12 அங்குலத்தை இழந்தவர் என்பதும், ஒரு முறை சிங்கள படையினர் இவரை சூழ்ந்து , கைது செய்யும் பொழுது தனது சாமர்த்தியத்தை பயன்படுத்தி அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதையும் கூறும் பொழுது இவருடைய மன உறுதி, மன பக்குவம், ஆபத்து வரும் பொழுது அதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்கிற மன முதிர்ச்சி எந்த அளவுக்கு இருந்திருகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

"உண்ணாவிரதம்" என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை இந்த புத்தகத்தில் இருந்துதான் எனக்கு புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு முன்பு உண்ணாவிரதம் என்று கூறி இருந்தவர்கள் எல்லாம் , அவ்வபொழுது தண்ணீர் குடிபார்களாம். காந்தி அடிகளும் இதற்கு விதி விலக்கல்ல, அவரும் உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் குடிபாராம். திலீபனிடம் உடல் மோசமாக இருந்த சமயத்தில், இதை கூறி தண்ணீர் குடிக்க சொன்ன பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் " தண்ணீர் அருந்தி உண்ணாவிரதம் இருப்பது என்றால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். அப்படி இருந்து மக்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் தண்ணீரும் இல்லாமல் இருபதுதான் என்று கூறி தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்தவர்தான் திலீபன்". அதுமட்டும் அல்லாமல் , உண்ணாவிரத மேடையில் ஏறுவதற்கு முன்பாக வாஞ்சிநாதன் அவர்களிடம் , 5 நாட்கள் கழித்து ஒரு வேலை நான் சுயநினைவு இல்லாமல் போகும் சூழ்நிலையில் எக்காரணம் கொண்டும் எனக்கு மருத்துவ உதவி செய்ய கூடாது என்று கூறி சத்தியம் வாங்கி கொண்டுதான் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினாராம்.

இதை எல்லாம் பார்த்து, சற்று நம்முடைய மன பக்குவத்தை எண்ணி பார்த்தல் , யோசிக்க வேண்டிய விசயாமகவே உள்ளது. நாம் காலேஜ் படிக்கும் பொழுது , பள்ளியில் நாம் நடந்து கொண்ட முறையை யோசித்து பார்க்கும் பொழுது சிரிப்பாகவும் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. காலேஜ் முடித்து வேலையில் சேர்ந்த நாட்களில் , காலேஜ் நாட்களில் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. இன்னமும் 5 வருடங்கள் கழித்து வேலைக்கு சேர்ந்த நாட்களை யோசித்து பார்த்தால், இவ்வளவு மோசாமாக நாம் இருந்தோமா, நமக்கு மன பக்குவம் இவ்வளவுதான் இருந்ததா என்று நினைக்க தோன்றுகிறது. எப்போதுதான் நாம் திறம் பட முடிவுகளை எடுப்போம்? எப்போது நாம் எடுக்கின்ற முடிவுகள் 5 வருடம் கழித்து யோசித்து பார்க்கும் பொழுது சரி என்று படுகிறதோ அப்போதுதான் நாம் ஓரளவு மனபக்குவதொடுதான் இருக்கிறோம் என்று நம்மை நாமே யூகிக்க முடியும் என்று நினைக்கிறன்.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது, 24 வயதில் கொள்கைக்காக உயிர் நீத்த திலீபன் ஒரு சகாப்தமே !!!!

இந்த புத்தகத்தை படிக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நண்பன் வாசுவுக்கு நன்றி :)