Sunday, August 2, 2009

அறிவு ஜீவிகளின் ஆடி மாதம்



ஆடி மாதம் - இந்த மாதத்தை பற்றி பொதுவாக சில கருத்துகள் அந்த காலத்திலிருந்து நிலவி கொண்டுதான் இருக்கின்றன. ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதுதான் அது.

இந்த கருத்து தேவைதானா? என்று ஆராயும் பொழுது தேவை இல்லை என்றுதான் தோன்றுகிறது எனக்கு. அந்த காலத்தில் பெரியவர்கள் சொன்னார்கள் என்றால், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும் , சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சொல்வது ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

ஆனால் இந்த காலத்தில் அது சரிதானா என்று சொன்னால் , வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அந்த காலத்தில் , காற்றாடி , குளிர் சாதன பெட்டி போன்ற வாய்புகள் இல்லை . ஆகையால் அது சரி. ஆனால் இந்த காலத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை. நம்மை எந்த அளவிற்கு, நம்மை கூலாக வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் கூடி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்றும் இதை காரணமாக கூறி கொண்டு திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த கூத்து என்றால் , ஆந்திராவிம் ஒரு பகுதியில் இன்னும் ஒரு படி அதிகமாக சென்று மாமியார்கள் இருவரும் பார்த்து கொள்ள கூடாதாம், அது மாதிரியே மருமகளும் , மாமியாரும் பார்த்து கொள்ள கூடாதாம். நம்பகமான நண்பர் ஒருவரிடமிருந்து வந்த செய்தி அது. என்னவென்று சொல்வதென்று தெரிய வில்லை இந்த கூத்தை.

திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை ஆடி மாதத்தில்.
உதாரணமாக , புது வீடு செல்ல கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ண கூடாது போன்றெல்லாம் சொல்லி கொண்டு இன்னும் நடை முறை படுத்தி கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும் , ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும்.
அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

ஆனால் நம்முடைய ஆள்கள் மிகவும் தெளிவானர்கள் , ஆடி மாதத்தில் ஒன்றும் விளங்காது என்று சொல்லி வைத்து ஊரை ஏமாற்றி , ஆடி தள்ளுபடியில் வாங்கும் பொருளை மட்டும் வலுவாக வாங்கி கொள்கிறார்கள். அது மட்டும் விளங்குமா என்று தெரியவில்லை.

இப்படி மக்கள் இருபது ஒரு வகையில் நல்லதாகவே பட்டது. நான் ஒரு வீடு பார்க்க வேண்டும் வாடகைக்கு என்று நினைத்து தேர்ந்து எடுத்த மாதம் இந்த மாதம்தான். காலியான வீட்டில் யாரும் குடியேற வில்லை. ஆகையால் பொறுமையாக முடிவு செய்து வீட்டை தேர்ந்து எடுத்தேன். எந்த வித போட்டியும் இல்லாமல்.

ஆடி மாதம் வாழ்க. அறியாமையில் வாழும் மக்கள் வாழ்க.

எல்லா மாதத்திற்கும் இது போன்று பெரியவர்கள் சொல்லி வைத்து இருந்தால் நல்லதாக இருக்குமோ என்று இப்போது உரைக்கிறது எனக்கு.

ப.பிரதீப்

8 comments:

R.Varadharajan said...

ஆடி மிகவும் விசேஷமான மாதம். அம்மனுக்கு உகந்தது. வரலக்ஷ்மி விரதம், ஆடி பெருக்கு, ஆண்டாள் பிறந்த தினம் என்று, இந்த மாதம் முழுவதும் பண்டிகைகள் தான். இந்த மாதத்தில் தான் விதைப்பார்கள். முன்னோர்களுக்கு ஆடி அம்மாவாசை அன்று திதி கொடுப்பது ரொம்ப விசேஷம். ஆக, ஆடி மாதத்தில் எதுவும் நல்ல காரியம் செய்ய மாட்டார்கள் என்பது தவறான தகவல்.

ஆடியில் ஏன் திருமணம் செய்வதில்லை என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ளதையே நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதையே உண்மையான காரணம் என்று கொண்டாலும், இந்த காலத்திக்கு அது தேவை இல்லை தான்.


ஆனால் அதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம்
பெருவாரியான மக்களை குறிப்பதாக இல்லை.
காத்தாடி,குளிர்சாதன பெட்டி, குளிரூட்டப்பட்ட அறை எல்லாருக்கும் கிடைப்பதில்லை.

//ஆந்திராவிம் ஒரு பகுதியில் இன்னும் ஒரு படி அதிகமாக சென்று மாமியார்கள் இருவரும் பார்த்து கொள்ள கூடாதாம்//

அதாவது பிள்ளையின் தாயாரும், பெண்ணின் தாயாரும். சம்பந்தி?

//அது மாதிரியே மருமகளும் , மாமியாரும் பார்த்து கொள்ள கூடாதாம்.//

வருடத்திற்கு ஒரு மாதம் இவர்கள் சந்திக்காமல் இருப்பதில் என்ன குடி முழுகி போகிறது! இந்த ஒரு மாத பிரிவு, அவர்கள் உறவை இன்னும் பலப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.


ஏன் புது வீடு புகுவது, வீடு காலி பண்ணுவது போன்ற காரியங்கள் ஆடி மாதத்தில் செய்வதில்லை என்றும் தெரியவில்லை.
எப்படியோ உங்களுக்கு எளிதாக வீடு கிடைத்ததில் சந்தோஷம்.

Pradeep said...

/***
ஆடி மிகவும் விசேஷமான மாதம். அம்மனுக்கு உகந்தது. வரலக்ஷ்மி விரதம், ஆடி பெருக்கு, ஆண்டாள் பிறந்த தினம் என்று, இந்த மாதம் முழுவதும் பண்டிகைகள் தான். இந்த மாதத்தில் தான் விதைப்பார்கள். முன்னோர்களுக்கு ஆடி அம்மாவாசை அன்று திதி கொடுப்பது ரொம்ப விசேஷம். ஆக, ஆடி மாதத்தில் எதுவும் நல்ல காரியம் செய்ய மாட்டார்கள் என்பது தவறான தகவல்.
***/
கோவிலுக்கு செல்வது நல்ல காரியம்தான். ஆனால் நான் எடுத்துரைக்க விரும்பிய "நல்ல காரியம்" அன்றாட வாழ்கையில் நடை பெரும் விசயத்தை. நீங்கள் வேண்டுமானால் ஒரு வியாபாரம் தொடங்க போகிறேன் ஆடி மாதத்தில் என்று உங்கள் வீட்டில் சொல்லி பாருங்கள். என்ன பதில் வந்தது என்பதையும் தவறாமல் சொல்லுங்கள். ஆக "தவறான தகவல்" என்று நீங்கள் கூறுவது தவறான தகவல் என்றே நான் கருதுகிறேன்.

/***
ஆனால் அதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம்
பெருவாரியான மக்களை குறிப்பதாக இல்லை.
காத்தாடி,குளிர்சாதன பெட்டி, குளிரூட்டப்பட்ட அறை எல்லாருக்கும் கிடைப்பதில்லை.
***/
காற்றாடி இல்லை என்று சொல்வதெல்லாம் ஏற்று கொள்ளும் படியாக இல்லை.குளிரூட்டப்பட்ட அறை என்று சொல்வது ஓரளவு சரி.

/***
அதாவது பிள்ளையின் தாயாரும், பெண்ணின் தாயாரும். சம்பந்தி?
****/
அதேதான்

/***
வருடத்திற்கு ஒரு மாதம் இவர்கள் சந்திக்காமல் இருப்பதில் என்ன குடி முழுகி போகிறது! இந்த ஒரு மாத பிரிவு, அவர்கள் உறவை இன்னும் பலப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.
***/
ஹ ஹ ஹ . உறவை பலபடுத்த ஆயிரம் வழிகள் உள்ளது. அதற்கு ஆடி மாதத்தை காரணம் காட்டி கொண்டு பிரிவது நல்லது , குடி முழுகி போகாது என்று சொல்வதெல்லாம் பார்க்கும் பொழுது நண்பரும் இதை நம்பும் ஒரு பேர்வழி என்றே தோன்றுகிறது.

R.Varadharajan said...

காத்தாடி எல்லா வீட்டிலும் இருக்கிறது.
கோடையில் காத்தாடியிலிருந்து வெப்ப காற்று தான் வரும். உங்களை கூலாக வைத்து கொள்வதற்கு உதவாது என்பதையே நான் சுட்டி காட்ட விரும்பியது. அதாவது, இது போன்ற நம்பிக்கைகள் இந்த காலத்திற்கு தேவையா என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கு நாம் முன் வைக்கும் விளக்கங்கள், வலிமையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொண்டு, நமது மாற்று கருத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

Pradeep said...

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.

/**
அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொண்டு, நமது மாற்று கருத்தை அமைத்து கொள்ள வேண்டும்.
**/
நான் சொல்ல வந்ததும் இதுவே.

இது போன்ற பல மூடநம்பிக்கைகளை எதை பற்றியும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக நம்பும் மக்களுக்கு எளிமையான கருத்துகளை சொல்லி புரிய வைக்க நினைத்தாலே புரியவைக்க இயலாது. இந்த மாதிரி நம்பிக்கை உள்ளவர்களுக்கு வலிமையான கருத்துகள் மற்றும் விளக்கங்கள் என்று சென்றோமானால் எந்த அளவுக்கு புரிய வைக்க இயலும் என்று தெரியவில்லை.

Joe said...

நல்ல கட்டுரை பிரதீப்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும், நல்ல கருத்துள்ள இடுகையை எழுதியிருக்கிறீர்கள்.

ஆடி மாதத்தில் கர்ப்பமுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கடும் வெயிலை பிஞ்சு உடம்பு தாங்காது என்பதால் தான் ஆடியில் கல்யாணம் செய்யாமல் இருப்பதும், ஆடி மாதம் புதுமணத் தம்பதிகள் பிரிந்திருக்கச் சொல்வதும்.

இந்த காலத்தில் இதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து. (The couple may stay together but play it safe ...)

Pradeep said...

நன்றி ஜோ.

/***
இந்த காலத்தில் இதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து. (The couple may stay together but play it safe ...)
***/
கரெக்டா சொன்னீங்க ஜோ.

Unknown said...

அருமையான கருத்து!
அதுவும், ஆடிக் கழிவு என்ற பெயரில் ஜவுளிக் கடையில் செய்யும் விற்பனை பற்றிய கருத்து, அட்டகாசம்!

Anonymous said...

ADIEIL KULANTHAI PERAPATHU NALATHA?

Post a Comment